தூத்துக்குடி:தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்மார்ட் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.3,000 ரொக்கம், வேஷ்டி, சேலை, பச்சரிசி, சீனி, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகராட்சி போல்பேட்டை பகுதியில் உள்ள டிஎம்சி காலனி நியாய விலை கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு ரூ.3,000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் எப்போதும் துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சி பகுதி எப்படி இருந்தது, தற்போது எப்படி உள்ளது என்பதை மக்கள் கவனிக்க வேண்டும் என்றார். ஒரு காலத்தில் குடிநீர் எப்போது வரும் என காத்திருந்த நிலை இருந்தது. ஆனால் தற்போது முதலமைச்சரின் உத்தரவின்பேரில் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், வரும் சில மாதங்களில் மாநகராட்சி முழுவதும் 24 மணி நேர குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
அத்துடன் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, வரும் 2026ஆம் ஆண்டு தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளருமான ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், அவைத்தலைவர் அற்புதராஜ், வட்டப்பிரதிநிதி அருணகிரி, 20வது வார்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், வசந்தகுமார், ஆனந்தகுமார், சிவபாலாஜி, ராஜ்குமார், பெரியசாமி, தங்கராஜ், ஜெயபாண்டி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
