November 5, 2026
#தூத்துக்குடி

ஏழைகளின் கனவாக இருந்த துப்பாக்கிச் சுடும் பயிற்சி – தமிழ்நாட்டில் உலகத் தர அகாடமி!

சென்னை:உலகத் தரம் கொண்ட துப்பாக்கிச் சுடும் வீரர்களை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாட்டில் சர்வதேச அளவிலான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் பகுதியில் ரூ.17 கோடி மதிப்பில் டிராப் மற்றும் ஸ்கீட் இரட்டை குழல் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மாநில துணை முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். மாநில திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா முன்வைத்த கோரிக்கையை ஏற்று இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், பதவியேற்ற முதல் நாளிலேயே “விடியல் பயணம்” திட்டத்திற்கு முதல் கையெழுத்திட்டு, மக்கள் நல திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறார். கடந்த 56 மாதங்களாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சி திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார்.

அதே பாதையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு துறைக்கு பொறுப்பேற்ற நாள் முதல் கபடி, ஹாக்கி, கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் தமிழக வீரர், வீராங்கனைகளை மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் ஊக்குவித்து வருகிறார். இதன் பலனாக தமிழகத்தைச் சேர்ந்த பலர் விளையாட்டு துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.

புதிதாக அமைக்கப்பட உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம், இதுவரை ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த துப்பாக்கிச் சுடும் விளையாட்டை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் பயிற்சி பெறும் வகையில் இந்த மைதானம் அமையும்.

மேலும், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களும் இங்கு பயிற்சி பெற முடியும். எதிர்காலத்தில் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தும் வகையில் இந்த மைதானம் வடிவமைக்கப்பட உள்ளதால், தமிழ்நாட்டின் விளையாட்டு வளர்ச்சியும் பெருமையும் உலகளவில் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.