தூத்துக்குடி: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தூத்துக்குடியில் நேற்று (நவம்பர் 1) சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட அணிவகுப்பு ஊர்வலத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் நடைபெற்ற ஊர்வலம் வேம்படி இசக்கியம்மன் கோயிலில் இருந்து தொடங்கியது. டாக்டர் சரவணன் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அண்ணா நகர், டூவிபுரம், காய்கறி மார்க்கெட் வழியாகச் சென்ற ஊர்வலம் வி.வி.டி. சிக்னல் அருகே நிறைவடைந்தது.
ஐந்து முக்கிய மாற்றங்கள்:
கடந்த 1925-ம் ஆண்டு நாக்பூரில் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரால் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, தேசம், தர்மம், பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. சமூக நல்லிணக்கம், குடும்ப அமைப்பைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தாய்மொழி மற்றும் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளித்தல், குடிமக்களின் கடமைகளைப் பின்பற்றுதல் ஆகிய ஐந்து முக்கிய மாற்றங்களை வலியுறுத்தி அமைப்பு செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
வி.வி.டி. சிக்னலில் பொதுக்கூட்டம் நிறைவு:
ஊர்வலத்தின் நிறைவாக வி.வி.டி. சிக்னல் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஸ்ரீ சீனிவாசன் தலைமை தாங்கினார். பூஜ்ய ஸ்ரீ பக்த லக்ஷண கிரி மகராஜ் ஆசியுரை வழங்கினார். ஸ்ரீ சந்தன செல்வம் முன்னிலை வகித்தார். ஸ்ரீ கணபதி சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

