November 5, 2026
#தூத்துக்குடி மாவட்டம் #விளாத்திகுளம்

விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கல்

விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த கரிமூட்ட தொழிலாளி சோலைராஜ் குடும்பத்துக்கு அரசின் சார்பில் ரூ.4 லட்சம் நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது.

விளாத்திகுளம் அருகே பிள்ளையார்நத்தம் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகன் –  அனந்தம்மாள் தம்பதியின் மகன் சோலைராஜ்(31). கடந்த 19-ஆம் தேதியன்று பிள்ளையார் நத்தத்தில் இருந்து பேரிலோவன்பட்டி செல்லும் சாலையில் அய்யனார் கோயில் அருகே கரிமூட்டத்தில்  சோலைராஜ் மற்றும் அவரது தாய் அனந்தம்மாள் ஆகிய இருவரும் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்பகுதியில் திடீரென சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது கரி மூட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சோலைராஜ் ( 31) மீது  மின்னல் தாக்கியதில் தாய் கண் முன்னே சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி எம்.பி., கனிமொழி,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன்  ஆகியோர் பிள்ளையார்நத்தம் கிராமத்தில் உள்ள சோலைராஜ் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து  ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் இயற்கை பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையை தூத்துக்குடி எம்.பி.,கனிமொழி  வழங்கினார். இந்நிகழ்வின் போது விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தங்கவேல், விளாத்திகுளம் டவுன் பஞ்., தலைவர் சூர்யா அய்யன்ராஜ், திமுக நகர  செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய  செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், வி.ஏ.ஓ., சித்துராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.