திருச்செந்தூர் அருகே தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததைக் காரணம் காட்டி கிராம மக்கள் எதிர்த்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில், உடன்குடி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட செம்மறி குளம் ஊராட்சி பகுதிகளில் உள்ள ராம சுப்ரமணியபுரம், வலசை கிணறு, கல்விளை, பூலிகுடியிருப்பு மற்றும் அனைத்தலை ஆகிய கிராமங்களில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கல்விளை கிராமத்திற்குள் பிரச்சார வாகனம் சென்றபோது, கிராம மக்கள் திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர். “எங்கள் ஊருக்கு இதுவரை எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. கோவில் கட்டித் தருவதாக கூறிய வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை” எனக் கூறி ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், திமுக நிர்வாகி ஒருவரின் சட்டையைப் பிடித்து கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அங்கிருந்த மக்கள் பிரச்சாரக் குழுவை விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

