November 5, 2026
#தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மக்கள் கோரிக்கைகளுக்கு விரைவு தீர்வு

தூத்துக்குடி வளர்ந்து வரும் மாநகராட்சிப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை போல்பேட்டை மாநகராட்சி முகாம் அலுவலகத்தில் சந்தித்து, பல்வேறு தரப்பினரும் தங்களது பகுதிகளில் உள்ள கோரிக்கைகளை மனுவாகவும், நேரிலும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், 39-வது வார்டுக்குட்பட்ட வடக்கு ரத வீதி, ராஜபிள்ளை சந்து உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மேயர் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, கடந்த 11 மாதங்களாக சாலை வசதி இல்லாததால் கடும் சிரமம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் காரணமாக சாலை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்த மேயர், பணிகள் உடனடியாக தொடங்கி, மூன்று தினங்களுக்குள் ராஜபிள்ளை சந்து சாலை பணி முழுமையாக முடிவடையும் என்றும், பொங்கல் பண்டிகையை கோலமிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார். இதற்கு பொதுமக்கள், மேயரின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும், அந்தப் பகுதியில் மின்விளக்கு வசதி தேவை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, உடனடியாக மின்விளக்குகள் பொருத்தப்படும் என மேயர் உறுதியளித்தார். பின்னர் வடக்கு ரத வீதியின் பல பகுதிகளிலும் நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்து, மக்களிடம் குறைகளை கேட்டார்.

இதனைத் தொடர்ந்து, 42-வது வார்டுக்குட்பட்ட பனங்காடு பகுதியில் நடைபெற்று வரும் புதிய சாலை அமைக்கும் பணிகளையும் மேயர் பார்வையிட்டார். சுமார் 40 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பொதுமக்களின் வசதிக்காக புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், அங்கு மின்விளக்கு பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு செய்தார்.

மேலும், புல் தோட்டம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா சிதைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, மேயர் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதை கண்ட அவர், அவற்றை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பூங்கா சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும், சமூக விரோத செயல்கள் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றும், பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கே உரியது என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு வார்டுகளில் நேரில் ஆய்வு மேற்கொண்ட மேயர், கோரிக்கை வைத்த 12 மணி நேரத்திற்குள் நேரில் சென்று ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேயரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின்போது, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்டச் செயலாளர் ரவீந்திரன், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.