November 4, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

நிவாரணம் இல்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு – புதூர் விவசாயிகள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் புதூர் வட்டார விவசாயிகள் மற்றும் கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சார்பில், வெள்ள நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி புதூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2024 டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருமழையால் பாதிக்கப்பட்ட வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், விவசாயி எத்தனை ஏக்கர் பயிரிட்டிருந்தாலும் அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். பாதிக்கப்பட்ட முழு பரப்பிற்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், பயிர் காப்பீடு தற்போது மக்காச் சோள பயிருக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், இதர வெள்ளைச் சோளம், வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி போன்ற பயிர்களுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதேபோல், விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்திற்கு மூத்த விவசாயி சேதுபாண்டி தலைமை வகித்தார். கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன், வட்டார விவசாயிகள் சங்கத் தலைவர் பிரசாத், செயலர் அண்ணாத்துரை, பால்ராஜ், மோகன், விஜயகுமார், பெருமாள்சாமி உள்ளிட்டோர் முன்னிலையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் விளாத்திகுளம் வட்டாச்சியர் கண்ணன், உதவி இயக்குநர் மலர்விழி, உதவி இயக்குநர் (இன்சூரன்ஸ்) அணி, தோட்டக்கலை அலுவலர் பிரவினா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, அரசு உரிய உதவி வழங்கவில்லை என்றால் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என எச்சரிக்கை விடுத்து விவசாயிகள் போராட்டத்தை கலைத்து சென்றனர்.