தூத்துக்குடியில் எஸ்.ஆர். இருதய சிகிச்சை மையம் மற்றும் புனித அக்குயினாஸ் நூலகம் சார்பில் மாபெரும் இலவச பொது மற்றும் இருதய பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாம் பார்த்தசாரதி நகர் மட்டக்கடை ஜங்ஷன் அருகே, கமலா சந்திர மஹால் எதிர்புறத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. VOC கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம் மருத்துவ முகாமை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். டாக்டர் சகாய பிரான்சிஸ் அகிஸ்டன் முன்னிலை வகித்தார்.
காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களுக்கு இலவசமாக இரத்த அழுத்தம், ஈசிஜி (ECG), ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட அடிப்படை சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இருதய குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வு விளக்கங்களும், இருதய மருத்துவரின் நேரடி மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதுபோன்ற இலவச மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் தொடர்ந்து கலந்து கொண்டு தங்களின் உடல்நலத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

