தூத்துக்குடி தேரடி முன்பு பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட துணைத் தலைவர் சத்தியசீலன், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், ஓபிசி மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட துணைத் தலைவர் சண்முகசுந்தரம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள், உஜ்வாலா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். இத்திட்டங்கள் தூத்துக்குடி மக்களுக்கு நேரடியாக பயனளித்து வருவதாகவும், ஆனால் அவற்றை மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாநகர மேயர் ஜெகன் உரிய முறையில் மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தவில்லை சிவ திட்டங்கள் மாநில அரசு தாங்கள் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய மாவட்ட துணைத் தலைவர் சத்தியசீலன், மத்திய அரசின் நலத்திட்டங்கள் அரசியல் லாபத்திற்காக அல்ல, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படுவதாக கூறினார். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களுக்கு மத்திய அரசு தேவையான நிதி உதவிகளை வழங்கி வருவதாகவும், அந்தத் திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைய பாஜக தொடர்ந்து களத்தில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஓ.பி.சி மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் பேசுகையில், சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே மத்திய அரசின் இலக்கு என கூறினார். ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஏழை எளிய மக்களுக்காக வீடு, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், மத்திய அரசின் திட்டங்கள் கட்சி, சாதி, மதம் பாராமல் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்டு வருவதாக கூறினார். உஜ்வாலா திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் மூலம் அடிப்படை வசதிகள் தூத்துக்குடி மக்களுக்கு கிடைத்துள்ளதாக விளக்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் பேசுகையில், தூத்துக்குடி நகர வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி, சாலை வசதி, துறைமுக வளர்ச்சி உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்கள் நகரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளதாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பரமசிவம், கிழக்கு மண்டல் தலைவர் ராஜேஷ் கனி, மேற்கு மண்டல் தலைவர் லிங்கசெல்வம், வடக்கு மண்டல் தலைவர் சுதா, சமூக ஊடகப் பிரிவு மாநில செயலாளர் காளிராஜா உள்ளிட்ட அணி, பிரிவு தலைவர்கள், மண்டல் நிர்வாகிகள் மற்றும் பல பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


