| தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் அடுத்த 20 நாட்களுக்குள் தினசரி குடிநீர் வழங்கும் பணியை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறோம் என்று தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார் அது குறித்து விரிவான செய்தி |
தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் 20 நாட்களுக்குள் தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
உங்களுடன் ஸ்டாலின்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் இதுவரை பெறப்பட்ட மாநகராட்சி தொடர்புடைய 239 மனுக்களில் 114 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தீர்வு காணப்பட்ட 33 மனுதாரர்களுக்கும், மாநகராட்சி மண்டல குறைதீர்க்கும் முகாம்களில் தீர்வு காணப்பட்ட 24 மனுதாரர்களுக்கும் தீர்வு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலத்தில் ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மேயர் ஜெகன்பெரியசாமி, பயனாளிகளுக்கு தீர்வு ஆணைகளை வழங்கி பேசுகையில்; “உங்களுடன் ஸ்டாலின்” திட்டமுகாமில் மாநகராட்சி தொடர்புடைய 239 மனுக்கள் வந்துள்ளன. இவற்றில் 114 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் கள ஆய்வு செய்யப்பட்டு அதற்குறிய தீர்வு விரைவில் எட்டப்படும்.
குடிநீர் வழங்கல் விபரம்; தூத்துக்குடி மாநகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து தினமும் 62 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, 37 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் 33 தொட்டிகளில் இருந்து தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஹவுசிங் போர்டுகாலனி, ஆதிபராசக்திநகர், குரூஸ்புரம், மில்லர்புரம் ஆகிய 4 பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து மட்டும் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.மேலும், 5 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இன்னும் 20 நாட்களில் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதற்காக புதிதாக கருப்புநிற குடிநீர் குழாய் பதிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும்.
பொதுமக்கள் குடிநீர் இணைப்பு கேட்டு மனு கொடுத்தால் உடனடியாக இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே முறையான அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்பு பெற்று இருந்தாலும், அதற்கு பணத்தை செலுத்தி உடனடியாக முறைப்படுத்திக் கொள்ளலாம்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கால்வாய்களில் பாலித்தீன் பைகளை போடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.அதுபோல கட்டிட கழிவுகளை தெருக்கள், சாலைகளில் கொட்டாமல் அதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கொட்ட வேண்டும். மாநகராட்சியின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து பசுமையான மாநகரை உருவாக்க துணை நிற்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையர்கள் வெங்கட்ராமன், பாலமுருகன், திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகராட்சி சுகாதார குழுத்தலைவர் சுரேஷ்குமார், மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கனகராஜ், அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார். வட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜேஸ்பர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

