தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் மதுரா கோட்ஸ் மில் எதிரில் உலக தரத்தில் நீச்சல்குளம் அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வுசெய்தார்.
தூத்துக்குடி,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பொருட்டு சாலைகள், தினசரி குடிநீர் விநியோகம், மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய், தெரு விளக்குகள், பூங்காக்கள், படிப்பகங்கள், முக்கிய சாலை சந்திப்புகளில் பாரம்பரிய சின்னங்கள், உயர்மின் கோபுர விளக்குகள் அமைத்தல் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலை முத்துநகர் கடற்கரை அருகே கரிகளம் காலனி பகுதியில் சர்வதேச தரத்தில் நீச்சல்குளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து நீச்சல் குளம் அமைய உள்ள இடத்தை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து மேயர் கூறுகையில் “மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், மாநகர மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன்படி தூத்துக்குடி மாநகராட் சிக்குட்பட்ட கரிகளம் காலனி அருகில் சர்வதேச தரத்தில் 50 மீட்டர் நீளத்தில் நீச்சல் குளம் அமைக்கப்படுகிறது. கனிமொழி கருணாநிதி எம்.பி.யின் முயற்சியால் நமக்கு நாமே திட்டத்தில் இந்த நீச்சல்குளம் கட்டப்படவுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படும். மாநகர பகுதியில் 206 இடங்கள் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது 53 இடங்களில் பூங்காக்கள் செயல்பட்டு வருகிறது. 20 இடங்களில் குறுங்காடுகள் அமைக்க திட்டமிடப்பட்டு 10 இடங்களில் அதற்கான பணிகள் முடிவடைந்துள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் செ.ஜெனிட்டா. சுகாதார குழு தலைவர் கவுன்சிலர் சுரேஷ்குமார். மாநில மீனவர் அணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேனியல், போல் பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர், ஜேஸ்பர் ஆகியோர் உடனிருந்தனர்.
.

