தூத்துக்குடி,ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் செய்து வரும் வஞ்சகத்தை தடுத்து, மக்களுடைய எடுத்துச் சொல்லும் ஓரணியில் தமிழ்நாடு பிரச்சார இயக்கம் நாளை 03.07.25 துவங்க உள்ளதாக அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஓரணியில் தமிழ்நாடு பிரச்சார இயக்கம் குறித்து கூறுகையில்;
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னெடுப்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பிரச்சார இயக்கம் வாயிலாக மக்களை சந்தித்து, ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் செய்து வரும் வஞ்சகத்தை, திமுக அரசின் சாதனைகளையும் வீடு வீடாக சென்று மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க இந்த “ஓரணியில் தமிழ்நாடு” பிரச்சார இயக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் “ஓரணியில் தமிழ்நாடு” பிரச்சார இயக்கம் வீடு வீடாக திமுகவினரால் கொண்டு செல்லப்படும். பிரச்சார பயணத்தில் புதிய உறுப்பினர் சேர்த்தல் புதுப்பித்தல் பணியை மேற்கொள்ள உள்ளோம். திமுக அரசு மக்களுக்காக கல்வி, சுகாதாரம், விவசாயம், மற்றும் மகளிர் மாணவர்களுக்கான நலத் திட்டங்கள், தொழில் வளர்ச்சி, விவசாய மேம்பாட்டு திட்டங்கள் என பல்வேறு சாதனைகளை செய்துவருகிறது, ஆனால் ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதி பகிர்வை வழங்காமல் வஞ்சிக்கிறது. கல்வி நிதி, 100 நாள் வேலை திட்டம் நிதி, ஜிஎஸ்டி வரிவிதிப்பு நிதியை முறையாக வழங்க மறுக்கிறது. நமது தொன்மை பாய்ந்த கீழடி நாகரீகத்தை கூட அங்கீகரிக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. செம்மொழியாம் தமிழ் மொழிக்கு ரூபாய் 113 ஒதுக்கீடு செய்கிறது ஆனால் சொற்ப எண்ணிக்கையில் பயன்படுத்தக்கூடிய சமஸ்கிருத மொழிக்கு ரூபாய் 2532 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியது. இதிலிருந்து தமிழும் தமிழ்நாடும் ஒன்றிய அரசால் எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.
மேலும் தொகுதி மறு வரையறை என்ற பெயரில் தமிழகத்தில் எம்பிக்கள் எண்ணிக்கை குறைக்கும் திட்டத்திலும் ஈடுபட்டுள்ளது. இப்படி எந்த வழியிலாவது தமிழகத்திற்குள் காலூன்றி விட வேண்டும் என அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவின் இந்த வஞ்சகத்தை தவிடு பொடியாக்கிட, நமது மண், இனம், மானம் காக்க அனைவரும் முதலமைச்சர் தலைமையில் “ஓரணியில் தமிழ்நாடாக” கை கொடுக்க வேண்டும், உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அமைச்சர்கள் கூறினர்.
பேட்டியின் போது மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவர் அணி இணைச் செயலாளர் புளோரன்ஸ், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பை.மூ.ராமஜெயம், அவைத் தலைவர் அருணாச்சலம், வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், மேகநாதன், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தர் மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி, இளைஞர் அணி, மாணவரணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

