தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் செ.ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்றது.
புதிய ஆணையருக்கு வாழ்த்துகள்;
கூட்டத்தில் இன்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் அவர்களுக்கு மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ்லின். சந்திரபோஸ், மந்திர மூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேயர் ஜெகன் பெரியசாமி கூட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில்;
நமது மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்க்கிணங்க அனைவருடைய ஒத்துழைப்போடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. சாலை, வடிகால் சுகாதார கட்டமைப்புகளை முறைப்படுத்தி செய்து வருகிறோம். கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பராமரிப்பின்றி கைவிடப்படும் நிலையில் இருந்தது, தற்போது அது சீர் செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் நெகிழி கழிவுகள் இல்லாத மாநகராட்சியாகவும், மாசு இல்லாத பசுமை மாநகராட்சியாக உருவாக்குவதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் வேண்டும்.
மாநகர வாழ்வை மேம்படுத்தும் மாபெரும் நடவடிக்கை தூத்துக்குடிக்கு தினசரி குடிநீர், 975 சாலைகள்- மேயர் ஜெகன்
மாநகராட்சி பகுதிகளில் முக்கிய பகுதிகளில் என்ட் டூ என்ட் சாலைகள், குறுகிய இடங்களில் பேவர் ப்ளாக் சாலைகள் போடப்பட்டு உள்ளது. விரைவில் 60 வார்டுகளிலும் 997 சாலைகள் அமைக்கப்பட்ட உள்ளது. அதுபோல மாநகராட்சியில் 38 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்கி வருகிறோம். தற்போது அனைத்து பகுதிகளிலும் தினசரி குடிநீர் வினியோகம் விரைவில் வழங்குவதற்கு இறுதிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுபோல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாநகராட்சி சொந்தமான இடத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வெளிப்புற நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு ஏதுவாக தனித்தனி கழிப்பறை வசதியுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
கூட்டத்தில் அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திர மூர்த்தி பேசுகையில் பழமையான 3வது மைல் மேம்பாலம் தடுப்பு சுவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பாலத்தில் செல்வதால் இங்கு புதிய பாலம் அமைக்க வேண்டும் அல்லது பாலத்தை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார், கந்தசாமி, ராஜேந்திரன், சரவணகுமார், கீதா முருகேசன், ராஜதுரை உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அகலப்படுத்தப்படும் 3 வது மைல் பாலம்
இதற்கு பதில் அளித்த மேயர் ஜெகன் பெரியசாமி 3 வது மைல் பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பாலத்தின் உறுதித்தன்மை பரிசோதனை செய்யப்படும்” மற்றும் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது இப் பணிகள் நிறைவடைந்து மாமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட சாலைகள், வடிகால் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி துணை ஆணையர் சரவணகுமார், உதவி பொறியாளர் சரவணன், நகர் நல அலுவலர் சரோஜா, மாமன்ற உறுப்பினர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

