November 4, 2026
#தூத்துக்குடி

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் வேட்புமனு தாக்கல்

தூத்துக்குடி:தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக, தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகம் முன்பிருந்து அவர் ஊர்வலமாகப் புறப்பட்டார். இந்த ஊர்வலம் காய்கறி மார்க்கெட், மாநகராட்சி அலுவலகம், பழைய பேருந்து நிலையம், குருஸ் பர்ணாந்து சிலை, மார்த்தாண்டம்பட்டி, சத்திரம், சிவன் கோவில் மற்றும் பழைய மாநகராட்சி பிரதான சாலை வழியாகப் பழைய துறைமுகம் எதிரே உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது.

அங்கு, கோட்டாட்சியரும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரபுவிடம் சி.த. செல்லப்பாண்டியன் தனது வேட்புமனுவை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், தொகுதிப் பொறுப்பாளர் சின்னத்துரை, முன்னாள் மேயர் சேவியர், அதிமுக மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் டேனியல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.