November 5, 2026
#தூத்துக்குடி

தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் அரசியல் மிரட்டல்? – மேயர் ஜெகன் மீது பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அரசியல் மிரட்டல் விடுத்ததாக, தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் சித்ராங்கதன் குற்றம்சாட்டியுள்ளார்.

கீதா ஜீவன் தலைமையில் கடந்த 22.02.2026 ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி VVD சிக்னல் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி உரையாற்றியபோது அரசியல் மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சித்ராங்கதன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

தூத்துக்குடி மாவட்ட பாஜக மாவட்ட துணைத் தலைவர் சண்முக சுந்தரம், மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஊழல் மற்றும் பராமரிப்பு குறைபாடுகள் குறித்து அண்மையில் பத்திரிக்கையில் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதற்கு தகுந்த பதில் அளிக்க முடியாத நிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமேடையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் மிரட்டல் விடுத்துள்ளார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், பாஜக சார்பில் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் மத்திய அரசு மக்களுக்கு செய்த நலத்திட்ட சாதனைகள், அதேவேளையில் மாநில அரசின் ஊழல்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரம் குறித்து பொதுமக்களிடம் விளக்குவது ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், “தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற விடமாட்டோம்; அந்தந்த பகுதிகளில் திமுக தொண்டர்களை கொண்டு தடை செய்வோம்” என மேயர் பொது வெளியில் சவால் விடுவது, அதேபோல் “30 ஆண்டுகளுக்கு முன் நடந்தது மீண்டும் இங்கே நடக்கலாம்” என மேடையில் பேசியிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தனது கண்டன அறிக்கையில் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில், மேயரின் இந்த பொறுப்பற்ற பேச்சு பொது அமைதிக்கு அச்சுறுத்தலாகும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அராஜக அரசியல் மற்றும் மிரட்டல் அரசியலை பாஜக ஏற்காது என்றும், ஆதாரங்களுடன் உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்லும் ஜனநாயகப் போராட்டமே தங்களின் வழி என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெறும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக தொடர்ந்து ஆதாரங்களுடன் வெளிக்கொணரப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரத்தில் இருப்போர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், மேயரின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றும் சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.