November 4, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

புதூர் யூனியன் அலுவலகத்தில் பரபரப்பு – பாம்பு கடித்து ஊழியர் அவசர சிகிச்சை!

கோவில்பட்டி:புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (48), புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பிரிவில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் புதூர் யூனியன் அலுவலகத்தின் புதிய கட்டிடம் திறக்கப்பட்ட நிலையில், பழைய அலுவலகத்தில் இருந்த கோப்புகள் மற்றும் ஆவணங்களை புதிய கட்டிடத்துக்கு மாற்றும் பணிகள் நேற்று நடைபெற்றன.

இந்த பணியில் ஈடுபட்டிருந்த மாரியப்பன், ஆவணங்களை எடுத்துச் செல்லும் போது கோப்புகளுக்குள் பதுங்கியிருந்த பாம்பு திடீரென அவரை கடித்தது. இதைக் கண்ட சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மாரியப்பனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.