தூத்துக்குடி, பிப்.12:
தூத்துக்குடி நகரில் இன்று அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஒரே பகுதியில் அருகருகே இரண்டு வேறுபட்ட காரணங்களை முன்னிறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
முதலில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் V.V.D சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகில் கூட்டமைப்பு தலைவி அந்தோணியம்மாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
“தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?”,
313 வாக்குறுதிகள் எங்கே போச்சு?”
“70 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பிடு”, “காலமுறை ஊதியம் வழங்கிடு” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பிய அவர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணியில் உள்ள ஊழியர்களுக்கு அதிக வேலைப்பளு ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேறாததால் ஏமாற்றம் நிலவுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதற்கிடையில், அதே V.V.D சிக்னல் அருகிலுள்ள சிதம்பரனார் பேருந்து நிறுத்தம் பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என குற்றம் சாட்டி மத்திய பாஜக அரசையும், அதற்கு துணைநிற்கும் அதிமுகவையும் எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தனர்.
ஒரே நேரத்தில், ஒரே பகுதியில், இரண்டு வெவ்வேறு அரசுகளை குறிவைத்து நடைபெற்ற இந்த இரட்டை ஆர்ப்பாட்டம் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது.
ஒருபுறம் “மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது” என திமுக குற்றம்சாட்ட, மறுபுறம் “மாநில அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என சத்துணவு ஊழியர்கள் சாடிய நிலை, இன்றைய அரசியல் சூழ்நிலையை பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.

