November 5, 2026
#செய்தி #தூத்துக்குடி

பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – சட்ட பாதுகாப்பு வழங்க உறுதி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில், பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், பாஜக தொண்டர்கள் மீது போடப்படும் பொய் வழக்குகள் மற்றும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளின் போது, அவர்களுக்கு சட்ட ஆலோசனையும் முழுமையான சட்ட பாதுகாப்பும் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், இளம் வழக்கறிஞர்களை கட்சியுடன் இணைத்து, தேசபற்று, ஒழுக்கம் மற்றும் சேவை மனப்பான்மை கொண்ட சட்டப் போராளிகளாக உருவாக்க வேண்டும் என்றும் கூறினார். சமூக அநீதிகள், ஊழல், அடக்குமுறை மற்றும் தேசிய விரோத செயல்களுக்கு எதிராக சட்ட வழியில் போராடுவது வழக்கறிஞர் பிரிவின் முக்கியக் கடமை என வலியுறுத்தினார்.

வழக்கறிஞர் பிரிவு என்பது பதவிக்காக அல்ல; தேசம், தர்மம் மற்றும் ஜனநாயகத்தை காக்கும் சட்ட சேவைக்கான அமைப்பாக செயல்பட வேண்டும் என்றும், மக்கள் தங்கள் அரசியல் சட்ட உரிமைகளை அறிந்து கொள்ள சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவர் முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முக சுந்தரம், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சுரேஷ்குமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சின்னத்தம்பி பாண்டியன் உள்ளிட்ட மாவட்ட துணைத் தலைவர்கள், செயலாளர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.