தூத்துக்குடி :2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தலைவர் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராக்க அனைத்து திமுகவினரும் ஒற்றுமையுடன் களப்பணியாற்ற வேண்டும் என சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுறுத்தினர்.
2026ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவனை போல்பேட்டையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்திலும், எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்திலும் திமுகவினர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் மேயர் ஜெகன் பெரியசாமியையும் திமுகவினர் போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்தினர்.
அப்போது அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், “2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் திமுக தலைமை அறிவிக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொண்டு, கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதைப் போல, வரவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெற வேண்டும். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும். இதற்காக கடமை உணர்வோடு களப்பணியாற்ற வேண்டும்” என வலியுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர துணை செயலாளர் கீதாமுருகேசன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், தலைமை பேச்சாளர் இருதயராஜ், ஒன்றிய, பகுதி, வட்ட நிர்வாகிகள், மாநகர, மாவட்ட அணிகளின் பொறுப்பாளர்கள், கவுன்சிலர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பின்னர் மாற்றுத்திறனாளிகள் அமைச்சர் கீதாஜீவனை அவரது இல்லத்திற்கு வந்து வாழ்த்தியதையடுத்து, அவர்களை வெளியில் வந்து வரவேற்ற அமைச்சர் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
