November 5, 2026
#தூத்துக்குடி

தூத்துக்குடியில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள் – பாஜக சார்பில் கொண்டாட்டம்

தூத்துக்குடி, டிசம்பர் 25 — முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள் இன்று (25.12.2025) நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் நிர்வாகிகள் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் உரையாற்றுகையில், “1980-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியை நிறுவியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள். அவர் விதைத்த அடித்தளத்தின் பலனாக இன்று நாடு முழுவதும் 19 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த தேசிய முன்னேற்றத்திற்கும் முதன்முதலாக வலுவான விதையை விதைத்தவர் வாஜ்பாய் அவர்களே” எனக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் தேன்மொழி, சமூக ஊடகப் பிரிவு மாநில செயலாளர் காளிராஜா, வர்த்தகப் பிரிவு மாவட்ட தலைவர் செந்தில், கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், பிரச்சாரப் பிரிவு மாவட்ட செயலாளர் அனுஷ்யா உள்ளிட்டோர், வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து உரையாற்றினர்.

மேலும், மாவட்ட அலுவலகத்தில் மட்டுமல்லாமல், கிழக்கு மண்டலத்தின் கீழரத வீதி பகுதி, தெற்கு மண்டலத்தின் முனியசாமிபுரம், மேற்கு மண்டலத்தின் சண்முகபுரம் மற்றும் வடக்கு மண்டலத்தின் சில்வர் புரம் பகுதிகளிலும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, மகளிர் அணி சார்பில் மாவட்ட துணைத் தலைவர் செல்வி அவர்களின் ஏற்பாட்டில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்பு 108 விளக்குகள் ஏற்றி சிறப்பான முறையில் பிறந்த நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.