November 5, 2026
#தூத்துக்குடி

பெண்கள் ஆண்டுதோறும் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் அறிவுறுத்தல்

CN.அண்ணாதுரை

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மகளிருக்கான புற்று நோய் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் உதவும் உள்ளங்கள் தொண்டு அறக்கட்டளை, நெல்லை கேன்சர் கேர் சென்டர், தூத்துக்குடி ரோட்டரி கிளப் நிறுவனங்களுடன் இணைந்து இலவச பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் வஉசி கல்லூரி அருகில் உள்ள பிங்க் பார்க்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில்; “பெண்களின் ஆரோக்கியத்திற்காக நடத்தப்படும் இந்த முகாமை பெண்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் உடனடியாக குணமாக்க முடியும். இன்று மட்டும் பரிசோதனை செய்துவிட்டு தொடர் பரிசோதனை செய்யாமல் விட்டால் நோயை குணப்படுத்த முடியாது.

40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் ஆண்டுதோறும் மேமோகிராம் மூலம் முழுமையான மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தற்போது மருத்துவத்தில் புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. இதனால் எந்த நோயும் குணப்படுத்த முடியும். மேலும் குடும்பத் தலைவிகள் உணவு விஷயத்தில் கவனக் குறைவாக இல்லாமல் பழங்கள், காய்கறி, பருப்பு, முட்டை, கீரை வகைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். இதுபோன்ற பரிசோதனை முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் நெல்லை கேன்சர் கேர் சென்டர் மருத்துவர் அபிராமி, தூத்துக்குடி ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பிண்டோ வில்லவராயர், மதுசூதனன், மகாலிங்கம், ஜோ பிரகாஷ், மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா, கவுன்சிலர்கள் விஜயலட்சுமி, ஜெயசீலி, இசக்கிராஜா, பொன்னப்பன், சுகாதார அலுவலர்கள் ராஜபாண்டி, ஸ்டான்லி பாக்கியநாதன் மற்றும் திமுக மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தர், மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் பெல்லா, மகளிரணி ரேவதி, கன்னியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.