November 5, 2026
#தூத்துக்குடி

பொங்கல்–காணும் பொங்கலை கொண்டாட தயார்: தூத்துக்குடி மாநகராட்சி பூங்காக்கள் – மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி:பொங்கல் மற்றும் காணும் பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்களை வரவேற்க தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் மற்றும் கடற்கரை பகுதிகள் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படும் நிலையில், காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் கடற்கரை, ஆற்றங்கரைகள், சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காக்களில் குடும்பத்தினருடன் கூடி மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவது வழக்கம். இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மேயர் நேரில் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகரில் ராஜாஜி பூங்கா, நேரு பூங்கா, எம்ஜிஆர் பூங்கா, விவிடி பூங்கா, சங்கரநாராயணன் பூங்கா, தனசேகரன் நகர், மில்லர்புரம், போல்டன்புரம், கால்டுவெல்காலனி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் சுமார் 53 பூங்காக்கள் செயல்பாட்டில் உள்ளன. அதேபோல் முத்துநகர் கடற்கரை, முயல்தீவு கடற்கரை, புதிய துறைமுக கடற்கரை, ரோச் பூங்கா போன்ற இடங்களிலும் காணும் பொங்கல் அன்று மக்கள் அதிகளவில் கூடுவார்கள்.

ஆய்வுக்குப் பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், மாநகராட்சி 60 வார்டுகளிலும் உள்ள சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான பூங்காக்களில் மின்விளக்குகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் சுகாதாரத்தை பேணும் வகையில் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், பொதுமக்கள் அவற்றை முறையாக பயன்படுத்தி தூய்மையை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

காணும் பொங்கல் அன்று அனைத்து பூங்காக்களிலும் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் பணியில் இருப்பார்கள். பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் பூங்காக்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மேயர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது இளநிலை பொறியாளர் லெனின், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச்செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் கந்தசாமி, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.