திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற உள்ள கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வருகின்ற பக்தர்கள் வாகனங்களை வீரபாண்டிய பட்டினத்தில் நிறுத்துவதற்கு மிகப்பெரிய அளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது அங்கிருந்து பக்தர்கள் எளிதாக கோவிலுக்கு நடந்து வருவதற்காக ஜே.ஜே. நகர் பகுதியில் உள்ள கால்வாயைக் கடந்து செல்ல தற்காலிகப் பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
சுமார் 300 அடி நீளம், 10 அடி அகலத்தில் அமைக்கப்படும் இந்தப் பாலத்தில் இரும்பு கட்டமைப்புகள், மரப்பலகைகள் மற்றும் பாதுகாப்புக் கைப்பிடிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கால்வாயின் நீர்ப்பகுதியில் இரும்புத் தூண்கள் நிறுவி, மணல் மூட்டைகள் மூலம் உறுதித்தன்மை ஏற்படுத்தும் பணிகளும் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
கந்தசஷ்டி விழாவின்போது அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அவர்களின் பாதுகாப்பான நடமாட்டத்திற்கு இந்தப் பாலம் முக்கிய வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் ஒருங்கிணைந்து நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: ரூ.11 லட்சம் செலவில் தற்காலிகப் பாலம் அமைக்கும் பணி தீவிரம்!

