November 2, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

17 ஆண்டுகளாக தொடரும் அவலம்! முத்துலாபுரம் பாலத்தை மாற்ற வலியுறுத்தல்

தூத்துக்குடி: முத்துலாபுரம் வைப்பாற்றுப் பாலத்தில் அடிக்கடி கான்கிரீட் பெயர்ந்து பள்ளம் ஏற்படுவதால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே, பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டவும், மு.கோட்டூர் விலக்கில் உயர்மட்டப் பாலம் அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ. வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி – எட்டயபுரம் – அருப்புக்கோட்டை – மதுரை இடையேயான சுமார் 144 கி.மீ. சாலை, கடந்த 2007-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டது. சுமார் ரூ.600 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2009-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இச்சாலை வழியாக தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. தூத்துக்குடி துறைமுகம், திருச்செந்தூர் கோவில் உள்ளிட்ட தென்பகுதி இடங்களுக்கும், மதுரை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்லும் முக்கிய வழித்தடமாகவும் இச்சாலை உள்ளது.

17 ஆண்டுகளாக தொடரும் பாலப் பிரச்னை

முத்துலாபுரம் அருகே வைப்பாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரு உயர்மட்டப் பாலங்களில், தூத்துக்குடி – மதுரை மார்க்கத்தில் உள்ள பாலத்தில் அடிக்கடி கான்கிரீட் இணைப்புப் பகுதியில் விரிசல் ஏற்பட்டு பள்ளம் உருவாகிறது. பாலம் பயன்பாட்டுக்கு வந்தது முதல் கடந்த 17 ஆண்டுகளில் 20 முறைக்கும் மேல் விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன 

மேலும், கனரக வாகனங்கள் செல்லும்போது பாலத்தில் அதிர்வு ஏற்படுவதாகவும், இதனால் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து அச்சம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, தற்காலிகமாகப் பழுதுகளைச் சீரமைப்பதற்குப் பதிலாக, பழைய பாலத்தை முழுமையாக அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

மு.கோட்டூர் விலக்கில் உயர்மட்டப் பாலம் தேவை

மு.கோட்டூர் விலக்கில் சாலையைக் கடக்கும்போது கடந்த 17 ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துகளில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அ. வரதராஜன் தெரிவித்துள்ளார். விபத்துகள் அதிகம் நிகழும் சில கிராம விலக்குகளில் உயர்மட்டப் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மு.கோட்டூர் விலக்கில் இதுவரை அதற்கான அடிப்படைப் பணிகள்கூட தொடங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முத்துலாபுரம் வைப்பாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டவும், மு.கோட்டூர் விலக்கில் உயர்மட்டப் பாலம் அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ. வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.