November 2, 2026
#Columnist/கட்டுரையாளர்

தேசத்திற்காக வாழ்ந்த மாபெரும் தலைவர் வாஜ்பாய்: பா.ஜ., கார்யகர்த்தா டாக்டர் சுதா புகழாரம்

தூத்துக்குடி: இந்திய அரசியலில் எளிமை, நேர்மை, தேசியப் பற்று, ஜனநாயக நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்தவர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் என, பா.ஜ., கார்யகர்த்தா டாக்டர் சுதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

அடல் பிகாரி வாஜ்பாய் அரசியல்வாதியாக மட்டுமின்றி சிறந்த கவிஞர், எழுத்தாளர், நாடாளுமன்றவாதி மற்றும் சிந்தனையாளர் என பன்முகத் திறமை கொண்டவர். இந்தியாவின் வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது.

1924 டிச., 25ல் மத்தியப் பிரதேசம் குவாலியரில் பிறந்த வாஜ்பாய், இளம் வயதிலேயே இலக்கியம், கவிதை, சமூக சிந்தனை மற்றும் தேசப்பற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். 1951ல் பாரதிய ஜனசங்கம் உருவானபோது அதன் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார். 1957ல் முதல் முறையாக மக்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறந்த நாடாளுமன்றவாதியாக செயல்பட்டார்.

1980ல் பா.ஜ., உருவானபோது அதன் முக்கிய நிறுவனத் தலைவர்களில் ஒருவராக இருந்து, கட்சியின் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் பயணம் செய்தார். அவரது நிதானமான அணுகுமுறையும், ஜனநாயகத்தின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையும் அவரை தனித்துவமான தலைவராக மாற்றியது.

1996ல் முதன்முறையாக பிரதமராக பதவியேற்ற வாஜ்பாய், பின்னர் 1998 முதல் 2004 வரை பிரதமராக நாட்டை வழிநடத்தினார். அவரது ஆட்சிக்காலத்தில் பொக்ரான் அணு ஆய்வுகள், தங்க நாற்கரச் சாலைத் திட்டம், கிராமப்புற சாலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

1999ல் கார்கில் போர் நடைபெற்றபோது, நாட்டை உறுதியான தலைமையுடன் வழிநடத்தியதுடன், இந்திய ராணுவ வீரர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கினார். அதே நேரத்தில் இந்தியா–பாகிஸ்தான் உறவை மேம்படுத்த லாகூர் பேருந்துப் பயணம் மேற்கொண்டு அமைதிக்கான முயற்சியையும் முன்னெடுத்தார்.

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அரசியல் எதிரிகளையும் மதிக்கும் பண்பைக் கொண்டிருந்தார். நாட்டின் நலனை கட்சியின் நலனுக்கு மேலாக வைத்திருந்த அவரது அரசியல் நாகரிகம், அனைத்து தரப்பினராலும் மதிக்கப்பட்டது.

அவரது நீண்டகால தேசிய சேவையைப் பாராட்டி 1992ல் பத்ம விபூஷண் விருதும், 2015ல் நாட்டின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னாவும் வழங்கப்பட்டன.

2018 ஆக., 16ல் அவர் மறைந்தாலும், நாட்டிற்காக அவர் உருவாக்கிய சிந்தனைகளும் சாதனைகளும் என்றும் நிலைத்திருக்கும். தேசியப் பாதுகாப்பு, நல்லாட்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, ஜனநாயக மரபுகள், அமைதி மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை ஒருங்கிணைத்த அவரது வாழ்க்கை, எதிர்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டியாகத் திகழும்.

‘தேசம் முதலில்; தனிப்பட்ட நலன் அதற்குப் பிறகு’ என்ற உயர்ந்த சிந்தனையை தனது வாழ்வின் மூலம் எடுத்துக்காட்டிய வாஜ்பாய், இந்தியர்களின் இதயங்களில் என்றும் வாழும் தலைவராக இருப்பார். இவ்வாறு டாக்டர் சுதா தெரிவித்துள்ளார்.