தூத்துக்குடி:தூத்துக்குடியில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி அரசு வளாகமான அண்ணா பல்கலைக்கழகம் – University V.O.C. College of Engineering, Thoothukudi வளாகம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பும் நலனும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரசு பொறியியல் கல்லூரி, பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் முக்கிய அரசு வளாகமாக செயல்பட்டு வரும் நிலையில், அதே வளாகம் தற்போது முள்புதர்கள், தண்ணீர் தேக்கம் மற்றும் துர்நாற்றம் வீசும் சுகாதாரமற்ற சூழலில் இருப்பது மிகுந்த கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்விக் கட்டிடங்கள், நடைபாதைகள், திறந்த வெளிகள் மற்றும் மாணவர் விடுதிகள் சுற்றுப்புறங்களில் நீண்ட காலமாக முள்புதர்கள் அகற்றப்படாமல் அடர்ந்து வளர்ந்துள்ளதால், விஷப்பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து, மாணவர்கள் உயிர் பயத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகளின் அருகே நீண்ட காலமாக தேங்கி நிற்கும் தண்ணீரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், அந்தப் பகுதி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதன் காரணமாக பல மாணவ, மாணவியர் விடுதிகளில் தங்க முடியாமல் வெளியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இது அவர்களுக்கு கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தின் Constituent College என்பதால், வளாகத்தின் கட்டிடங்கள், உள் சாலைகள், குடிநீர், வடிகால், மின் வசதிகள் மற்றும் பெரிய பழுது வேலைகள் அனைத்தும் தமிழ்நாடு பொதுப்பணித் துறை (PWD – Buildings Wing) மூலம் பராமரிக்கப்பட வேண்டியவை என குறிப்பிட்ட அவர், கல்லூரி நிர்வாகமும் பொதுப்பணித் துறையும் ஒருங்கிணைந்து செயல்படத் தவறியதே இந்நிலைக்குக் காரணம் என குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலமுறை நிர்வாகத்திடம் புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது நிர்வாகத்தின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

மாணவர்கள் கல்வி கற்க வரும் அரசு கல்வி வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் முதன்மையானதாக இருக்க வேண்டிய நிலையில், தண்ணீர் தேக்கம், துர்நாற்றம் மற்றும் முள்புதர்கள் சூழ்ந்த நிலையில் கல்வி கற்பது மாணவர்களின் உயிரையும் எதிர்காலத்தையும் ஆபத்தில் தள்ளும் செயலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், அதற்கான முழுப் பொறுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறையையே சாரும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே உடனடியாக முள்புதர்களை முழுமையாக அகற்றி, தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றி, வளாகம் முழுவதும் சுத்தம் செய்து, விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், மாணவர் பாதுகாப்புக்காக நிரந்தர பராமரிப்பு திட்டம் அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கைகளை நிர்வாகம் அலட்சியப்படுத்தினால், மாணவர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி பாஜக சார்பில் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அறிவித்துள்ளார்.

