தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 301 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் ரவிசந்திரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முத்துராஜா வரவேற்புரையாற்றினார்.
மடிக்கணினிகளை வழங்கி பேசிய சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தமிழக அரசு கல்விக்கு முதன்மை அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் 300 பேர் வெளிநாடுகளில் கல்வி பயின்றுள்ள நிலையில், அதிமுக ஆட்சியில் இந்த எண்ணிக்கை 6 பேர் மட்டுமே என்றார்.
மேலும், காலை உணவுத் திட்டம், 7.5 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களால் மாணவர்களின் கல்வித் திறன் மேம்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் அரசு வழங்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
விழாவில் தாசில்தார் திருமணி ஸ்டாலின், திமுக நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் பாலகங்காதேவி நன்றியுரையாற்றினார்.

