December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடியில் மன்னர் தேர்மாறனுக்கு நினைவு மண்டபம் அமைத்து விழா எடுக்கப்படும்; வேலூர் இப்ராஹிம் அறிவிப்பு

Byசி.என்.அண்ணாதுரை

குமரி முதல் ராமேஸ்வரம் வரையிலான முத்துக்குளித்துறை பகுதியை ஆட்சி புரிந்தவர் தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன் என்கிற தேர்மாறன். வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கப்பலும் மருது சகோதரர்கள் ஊமைத்துரைக்குப் போரிட ஆயுதங்களும் படை வீரர்களும் கொடுத்து ஆங்கில அரசை எதிர்த்தவர். இவரது கல்லறை தூத்துக்குடி லசால் அருள் சகோதர்களின் பங்களாவின் வளாகத்தில் உள்ளது.

இவரை மத்திய அரசு விடுதலைப் போராட்ட வீரராக அங்கீகரித்து இருக்கிறது. தேர்மாறன் கல்லறைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் வருகை தந்தார். அவரிடம் பரத குல ஊர்நலக் கமிட்டி நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்து நிறைவேற்றித் தருமாறு மனு அளித்தனர்.

அந்த மனுவில், “கட்டபொம்மன் ஊமைத்துரை மற்றும் மருது சகோதரர்களோடு இணைந்து விடுதலைக்காகப் போரிட்ட தேர் மாறனின் வரலாற்றை சிபிஎஸ்இ பாடத்தில் சேர்த்திட வேண்டுகிறோம். தேர்மாறனின் பிறந்த நாளான டிசம்பர் 3ஐ மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் இணையதளத்தில் டிசம்பர் 13 எனத் தவறாகப் பதிவாகி உள்ளது. அதனை டிசம்பர் 3 எனத் திருத்தம் செய்யும்படி வேண்டும்.

மத்திய அரசின் கலச்சாரத்துறையின் இணையதளத்தில் தேர்மாறன் நிழற்படத்தையும் ஏற்றிட வேண்டும். விடுதலைப் போருக்குத் தன்னுடைய கப்பல் மூலம் தேர்மாறன் ஆயுதம் வழங்கியவர் என்பதால், தூத்துக்குடி வ.உசி பழைய துறைமுகத்தின் நுழைவு வாயிலுக்குத் தேர்மாறன் நுழைவு வாயில் என்று பெயரிட வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்திற்குத் தேர்மாறனின் பெயரைச் சூட்டிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழாவில் வேலூர் இப்ராஹிம் பேசுகையில்; சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட மன்னர் பரதவர்ம பாண்டியன் என்கிற பாண்டியபதி தேர்மாறனின் புகழ் மறைக்கப்பட்டுள்ளது. அவரின் தியாகத்தைப் போற்றும் வகையில் பாரத பிரதமரின் அனுமதியோடு அவருக்கு நினைவு மண்டபம் அமைத்து மத்திய அமைச்சர்களை கொண்டு விழா எடுக்கப்படும் என பேசினார்.

இந்நிகழ்வில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரைட்டர், பாஜக மாநில ஓபிசி அணி துணை தலைவர் விவேகம் ரமேஷ், பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன், வழக்கறிஞர் சண்முக சுந்தரம், தமிழக மீனவ மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் அ.கோல்டன் பரதர், பரத குல ஊர்நலக் கமிட்டி நிர்வாகிகள், இன்னாசி, அந்தோணி சாமி, மன்னன் தேர் மாறன் கல்லறை மீட்பு குழு நிர்வாகிகள், நெய்தல் வாசகர் வட்ட பிரதிநிதிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.