December 1, 2025
#தூத்துக்குடி

பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் – மேயர் ஜெகன் வலியுறுத்தல்

CN. அண்ணாதுரை

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும், மாநகராட்சி சார்பில் பாலிதீன் பைகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி வடக்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் முகாமில் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்குமண்டலத்தில் 05.02.25 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, முன்னிலை வகித்தனர். வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ் வரவேற்றார்.

முகாமில் வடக்கு  மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு சொத்து வரி நிர்ணயம், பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், தொழில் வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து கோரிக்கை மனுக்களை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கினார்கள்.

முகாமில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி; 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்க்கிணங்க, மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் கோரிக்கை மனுக்களை பெற்று பரிசீலனை செய்து முன்னுரிமை அடிப்படையில் தீர்வு கண்டு வருகிறோம்.

மேலும், குடிதண்ணீர், சாக்கடை வசதி, இறப்பு, பிறப்பு சான்றிதழ் உள்பட அடிப்படை வசதிகளுக்கான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது.

சாலை வசதிகள் குறித்த மனுக்கள் மட்டும் நிலுவையில் உள்ளது. சாலைகள் போடுவதில் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிற மார்ச் மாதத்துக்குள் அனைத்து சாலைகளும் முழுமையாக போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தூத்துக்குடி மாநகரத்துக்கு உட்பட்ட பகுதியில் தினசரி 150 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில், பிளாஸ்டிக் பைகள் தான் அதிக அளவு வருகிறது. பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இன்னும் பொதுமக்கள் அதிகளவில் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தி வருகிறார்கள். தற்போது பிளாஸ்டிக் பைகளை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், குப்பைகளை கண்ட இடங்களில் போடுவதை தடுக்கும் விதமாக 427 இடங்கள் கண்டறியப்பட்டு தற்போது 120 இடங்களாக குறைக்கப்பட்டு வருகிறது. இதுவும் படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடியை பசுமையாக்கும் திட்டத்தில் இதுவரை 5 லட்சம் மரங்கள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் தங்களது வீடுகளுக்கு முன்பு மரங்கள் வளர்க்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

முகாமில், துணை ஆணையர் சரவணகுமார், துணை மாநகரப் பொறியாளர் சரவணன், திட்ட பொறியாளர் ரங்கநாதன், வடக்கு மண்டல ஆணையர் சுரேஷ், உதவி செயற்பொறியாளர் ராமச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், காந்தி மணி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின் , பவானி மார்ஷல், சுப்புலட்சுமி, ஜெபஸ்டின் சுதா, கற்பகக்கனி, பகுதி செயலாளர் சிவக்குமார், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் ஜேஸ்பர், போல் பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.