December 1, 2025
#தூத்துக்குடி

அனைத்து அங்கன்வாடிகளும் மறு சீரமைப்பு செய்யப்படும் – அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி மாநகரில் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள 2 அங்கன்வாடி மையக் கட்டடங்களை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து, செய்தியாளிடம் கூறுகையில்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாநிலத்தின் அனைத்து அங்கன்வாடி மையங்களும் மறு சீரமைப்பு செய்யப்படும் என தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரேஸ்புரம் மேட்டுப்பட்டி, சுந்தரவேல்புரம் பகுதிகளில் எல் & டி நிறுவனத்தின் பிரயாஸ் டிரஸ்ட் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ.42 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்ததாவது: குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்களின் நலனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு நிறுவனங்கள் தங்களது சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து பல திட்டப் பணிகளை அர்ப்பணிப்போடு செய்து வருகிறது. கட்டுமானத்துறையில் முன்னணி நிறுவனமான எல் & டி நிறுவனத்தின் பிரயாஸ் டிரஸ்ட் மூலமாக தூத்துக்குடியில் மேட்டுப்பட்டி மற்றும் சுந்தர வேல் புரத்தில் புதிதாக 2 அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் மீனா சுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக ஆர்வலராக முதலமைச்சரிடம் விருது பெற்றவர்.

அந்த விருது தொகையாக வழங்கப்பட்ட ரூ.50 ஆயிரத்தையும் இந்த இரண்டு அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், நாற்காலிகள், மேசைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எல் & டி நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் இணைந்து கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு பொது நிதியினை பயன்படுத்தலாம் என உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி மாநில முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும், நமது மாவட்டத்தில் கலெக்டர் ஊரகப்பகுதிகளில் உள்ள சுமார் 113 அங்கன்வாடி மையக் கட்டடங்கள் இந்த வரும் நிதியாண்டில் முழுமையாக புதுப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இளம் தாய்மார்களுக்கு பாலூட்டும் முறைகள் குறித்து உரிய வழிகாட்டுதல்களை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறை பணியாளர்கள் வழங்கி வருகிறார்கள். இந்த ஆண்டிலேயே அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும்.

ஜூன் 4ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 9000 இடங்களில் நடைபெறவுள்ள மக்களுடன் முதல்வர் முகாமில், தகுதியுள்ள மகளிர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பிக்காமல் இருந்த தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், எல் & டி நிறுவனத்தின் பிரயாஸ் டிரஸ்ட் தலைவர் மீனா சுப்ரமணியம், மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, திட்ட அலுவலர் (பொ) காயத்ரி, வட்டாட்சியர் முரளிதரன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் நாகேஸ்வரி, பவானி மார்ஷல், அந்தோணி பிரகாஷ் மார்ஸ்லின், தெய்வேந்திரன், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (நகர்ப்புறம்) ரூபி பெர்ணான்டோ, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டச் செயலாளர்கள் சதீஷ்குமார், முனியசாமி, ரவிச்சந்திரன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தர், தகவல் தொழில் பணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அந்தோணி கண்ணன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மருத்துவர் அணி தலைவர் அருண் குமார், ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் கருப்பசாமி, தொண்டர் அணி துணை அன்பரசன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் லூக்காஸ், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர் ஆறுமுகம் மார்ஷல், அமாலுதீன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.