December 1, 2025
#ஆன்மிகம் #விளாத்திகுளம்

விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்…… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

விளாத்திகுளத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில் சித்திரை பெருந்திருவிழா 11 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் திருவிழா கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கோயிலில் சித்திரைப் திருவிழா  கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை காலை மற்றும் இரவில் வீதியுலா உள்ளிட்டவை நடைபெற்றன.
9ஆம் திருநாளான ( 20ம் தேதி ) சனிக்கிழமை இரவு துலாம் லக்கினத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

10ஆம் நாளான இன்று   மாலை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி பூஜை, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றன. காலை 11 மணி அளவில்  சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளள் வைபவம் நடைபெற்றது. மாலை 4 மணியளவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விளாத்திகுளம் டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க திருத்தேரோட்டம் நடைபெற்றது.

 

தேரோட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக ஒரு பிரிவினர் சாதி அடையாளங்களுடன் சில வாசகங்களை குறிப்பிட்டு பனியன்களை அச்சடித்து தயார் நிலையில் வைத்திருந்தாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல்  அறிந்த விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பெருமாள் தலைமையிலான போலீசார் சாதி அடையாளங்களுடன் கூடிய பனியன்கள் மற்றும் கொடிகளை கைப்பற்றினர்.

தேரோட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க விளாத்திகுளம் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன், கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.