தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராட வேண்டாம் என போலீஸார் தடை விதித்துள்ளனர்
தென் தமிழக கடற்கரை, கேரளா உள்ளிட்ட கடலோரங்களில் கள்ளக் கடல் நிகழ்வால் கடல் சீற்றம் அதிகமாக இருக்கிறது. இதனால் பக்தர்கள் தென் தமிழக கடலோர பகுதிகளில் குளிக்க வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் தென் தமிழக கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய கடலோர பகுதிகளுக்கு
ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 2.30 மணி முதல் இன்று இரவு 11.30 மணி வரை கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் என்பது புயல், காற்றழுத்த தாழ்வு நிலை வரும் போதுதான் ஏற்படும். ஆனால் இப்படிப்பட்ட முக்கிய நிகழ்வுகள் இல்லாமல் பலத்த காற்றின் காரணமாக கடல் சீற்றம் ஏற்படுவது என்பது கள்ளக்கடல் என அழைக்கப்படுகிறது. 16 முதல் 23 வினாடிகளுக்கு ஒரு அலை வீதமும் 1.8 மீட்டர் உயரம் கொண்ட பேரலைகள் உருவாகும் என்கிறார்கள்.

இந்த கள்ளக்கடல் நிகழ்வு இரு நாட்களுக்கு தென் தமிழக கடலோர பகுதி மற்றும் கேரளாவில் ஏற்படலாம் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மீனவர்கள் மட்டும் இன்றி கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல்
குமரி கடலில் கூட யாரும் குளிக்க வேண்டாம் என அந்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

