December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலையால் தூத்துக்குடி தொழில்துறையில் புதிய அத்தியாயம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

தூத்துக்குடி : மாவட்டத்தில், சிப்காட்-சில்லாநத்தம் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலையை 2025 ஜூலை 31 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் இந்த ஆலையை அமைத்துள்ளது.


இது குறித்து தொழிற்துறை அமைச்சர் கூறுகையில்

மாநிலத்திற்கு பெருமை தரும் நிகழ்வாக இந்த திறப்பு விழா இருக்கும் என தொழிற்துறை அமைச்சர் டாக்டர். டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார். இந்த திட்டம் 15 மாதங்களில் ஒப்பந்தக் கையெழுத்திலிருந்து தொடக்க விழா வரை விரைவாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான முடிவெடுக்கும் திறன் கொண்ட ஆட்சியின் விளைவாகும் என அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியது:நாங்கள் தொழில்துறை வளர்ச்சிக்கு உறுதியான, நீண்டகால முதலீட்டாளர்களை ஈர்க்க விரும்புகிறோம். அவற்றில் தொழில்நுட்பம், முதலீட்டுத் தொகை, வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சி ஆகியவை முக்கியமானவை. இந்த கோணத்தில், வின்ஃபாஸ்ட் எங்கள் பார்வைக்கு பொருத்தமான நிறுவனமாகும்.

மேலும் இந்தியாவில் வின்ஃபாஸ்ட் முதல் உற்பத்தி ஆலையாகும். முதற்கட்டமாக, ஆண்டுக்கு 50,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனுடன், 114 ஏக்கர் நிலத்தில் ரூ.1,120 கோடி முதலீட்டில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படவுள்ள வி.எஃப்.6 மற்றும் வி.எஃப்.7 மாடல் மின்சார கார்களுக்கு ஏற்கனவே முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்;

இந்த தொழிற்சாலை, தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக, இந்த ஆலை 3,500 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உள்ளூர் பொருளாதாரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், இந்த ஆலையில் பணியாற்றுவதற்காக தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 200 இளைஞர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ கல்லூரிகளில் பயின்றவர்கள் .

இந்த திட்டம், தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய ஒரு முக்கிய முயற்சியாகும். இந்த 200 இளைஞர்களின் தேர்வு, உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் திறனைப் பயன்படுத்துவதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

தொழிற்துறை செயலாளர் அருண் ராய் கூறியதாவது:

2024 பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டதிலிருந்து மிகக் குறுகிய காலத்திலேயே வின்ஃபாஸ்ட் நிறுவனம் தங்களது கட்டுமான பணி நிறைவு செய்து உற்பத்தியை செயல்பட துவங்க தயாராகிவிட்டது. இது தமிழ்நாட்டில் தொழில்துறையை எவ்வளவு விரைவாக வளர்த்தெடுக்க முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு.

தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டில், வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16,000 கோடி (அல்லது 2 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீட்டை உறுதியளித்தது. இந்த திட்டம் 3,500 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.முதற்கட்டத்திலேயே ஆண்டுக்கு 50,000 மின் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும்.

தூத்துக்குடியின் ஆழமுள்ள துறைமுகம் இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஏற்றுமதி வசதிகளையும், போக்குவரத்து செலவுகளையும் குறைக்கும். இதன் மூலம் தூத்துக்குடி, மின் வாகன ஏற்றுமதிக்கான வாயிலாக மாற்றப்பட உள்ளது.இந்த முதலீட்டை தாண்டி பல்வேறு நிறுவனங்களை தூத்துக்குடிக்கு ஈர்க்க, தொழிற்துறைத் துறை முதலீட்டாளர் மாநாட்டை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து, 2024 பிப்ரவரி 25 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்தியாவில் எந்தவொரு வெளிநாட்டு வாகன உற்பத்தி நிறுவனத்திற்கும் இவ்வளவு விரைவாக ஆலை அமைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த வேகமான முன்னேற்றம், தமிழ்நாடு அரசின்தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு முயற்சிகளுக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.