தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த
881 பயனாளிகளுக்கு ரூ.77.80 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
2735 கோடி ரூபாய் வங்கிக் கடன்;
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 09.09.2024 அன்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2735 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கி தொடங்கி வைத்ததைத்தொடர்ந்து, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நலத்திட்டங்களை வழங்கினார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், திருவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி. அமிர்தராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) மல்லிகா அனைவரையும் வரவேற்றார்.
இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 723 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.73 கோடி வங்கிக் கடன் இணைப்புகள்,
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.77.32 இலட்சம் கடன் உதவிகள், தொழிலாளர் துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.11.65 இலட்சம் பணியிடத்து விபத்து மரணம் மற்றும் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகைகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம்.
திட்டத்தின் கீழ், தூத்துக்குடி, திருவைகுண்டம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 82 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி செலவில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவு ஆணைகள்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கை, கால் பாதிக்கப்பட்ட 20 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.21.14 இலட்சம் மதிப்பிலான (செயற்கைக்கால் மற்றும் கைகள்) செயற்கை அவையங்கள் என மொத்தம் 881 பயனாளிகளுக்கு ரூ.77.80 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், உதவி ஆணையர்(தொழிலாளர் துறை) மின்னல்கொடி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் செயல் அலுவலர் தாமோதரன், உதவி திட்ட அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

