December 1, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளம் அருகே வாதலக்கரை கிராமத்திற்கு சாலை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

விளாத்திகுளத்தை அடுத்து புதூர் யூனியனுக்கு உட்பட்ட வாதலக்கரை கிராமம் உள்ளது. இங்கு பல்வேறு திட்டப் பணிகளின் கீழ் பேவர்பிளாக் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.

இங்கு உள்ள பேருந்து நிலையத்திலிருந்து கிழக்குத் தெரு வரை உள்ள மணல் சாலையில் மட்டும் பேவர் பிளாக் சாலை அமைக்காததால் அங்கு பெய்த மழையின் காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும் என்று கடந்த சில நாட்களாக பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மழை நீர் தேங்கி சகதியாக உள்ள சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக சாலை அமைத்து தர வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இது குறித்து புதூர் யூனியன் அதிகாரிகள் கூறுகையில் : வாதலக்கரை கிழக்கு தெருவில் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்கான இடத்தை அளந்து தருவதற்கு வருவாய் துறையிலும் மனு வழங்கப்பட்டுள்ளது அவர்கள் நிலத்தை முறையாக அளந்து வழங்கிய பின்பு விரைவில் சாலை அமைத்து தரப்படும் என்று தெரிவித்துள்ளனர்.