விளாத்திகுளம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 தொழிலாளிகள் கடுமையாக காயமடைந்தனர்.
தூத்துக்குடி விளாத்திகுளம் கே.குமராபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சங்கையாவின் மகன் பெருமாள் (40) மற்றும் சாலையம் தெருவைச் சேர்ந்த முருகனின் மகன் சக்திநாகராஜன் (45) இருவரும் கூலி தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.நேற்று மாலை பெருமாள் தனது பைக்கில் சுப்பிரமணியபுரத்திலிருந்து விளாத்திகுளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அதேசமயம் சக்திநாகராஜன் சாலையம் தெருவிலிருந்து சுப்பிரமணியபுரம் நோக்கி பைக்கில் பயணம் செய்தார். இந்நிலையில், விளாத்திகுளம் வைப்பாற்று மேம்பாலத்தின் மீது சென்றபோது, இருவரது பைக்குகள் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் பெருமாள் மற்றும் சக்திநாகராஜன் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்த விளாத்திகுளம் போலீசார் இருவரையும் மீட்டு உடனடியாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி வழங்கப்பட்டு, பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இது தொடர்பாக விளாத்திகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

