தூத்துக்குடி மாநகராட்சியின் நடவடிக்கையாக, சாலையோர வியாபாரிகள் வங்கிக் கடன் பெறும் சிறப்பு முகாம் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கி, பொதுமக்களுக்கு இந்த திட்டத்தின் விவரங்களை விளக்கினார்.
மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி துவங்கிய இந்த திட்டத்தின் ஆரம்பத்தில் 50 அட்டை மட்டுமே இருந்தது. தற்போது 9,997 வியாபாரிகள் கடன் பெற்றுள்ளனர். இதில், முதல் கட்டமாக 6,325 பேர், இரண்டாம் கட்டமாக 3,267 பேர் மற்றும் மூன்றாவது கட்டமாக 406 பேர் ரூ.50,000 வரை கடன் பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடக்கி வைத்த திட்டத்தின் அடிப்படையில் தற்போது 1,862 கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வங்கியில் லோன் பெற அடையாள அட்டை அவசியம், 10,000 ரூபாய் கடனுக்கு 2,500 ரூபாய் மானியம் செலுத்த வேண்டும். இந்த முகாம் ஒரு வார காலமாக தொடர்ந்து நடைபெறும். மாநகராட்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இட ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வியாபாரிகளுக்கு கடை அமைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் காந்திமதி, முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் தங்கம், கவுன்சிலர்கள் கனகராஜ், ரெக்ஸ்லின், திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டசெயலாளர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், ராஜ்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளருமான ரவீந்திரன், பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் ஞானமார்டின், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் வங்கி அலுவலர்கள், சாலையோர வியாபாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

