December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

திருச்செந்தூர் கிரிக்கெட் போட்டி: கனிமொழி எம்பி பரிசுகள் வழங்கினார்

திருச்செந்தூர் அருகே தண்டுபத்து ஊராட்சியில் கலைஞரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டி – வெற்றி பெற்ற அணிகளுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி. பரிசுகள் வழங்கினார்.

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியின் தண்டுபத்து ஊராட்சியில், முத்தமிழறிஞர் கலைஞரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், பங்கேற்ற அணிகளுக்கும் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் முதலிடம் பெற்ற சிவலூர் கிரிக்கெட் அணி, ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் வெற்றிக்கோப்பை பெற்றது. முதலாவது 10 அணிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டதுடன், அனைத்து 200 அணிகளுக்கும் கிரிக்கெட் பேட் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.

கல்லூரி மற்றும் விடுதி கட்டணம் ரூ.75,000

மேலும், திருச்செந்தூர் அருகே ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றதற்காக, அவருடைய கல்லூரி மற்றும் விடுதி கட்டணம் ரூ.75,000 தொகையை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கனிமொழி கருணாநிதி வழங்கினார்.

விழாவில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி.,

“முத்தமிழறிஞர் கலைஞர், இளைஞர்களுக்காக தகவல் தொழில்நுட்பக் கொள்கை, கணினி பாடம், டைட்டில் பார்க், கிராமக் கல்லூரிகள் என பல்வேறு முன்னோடி திட்டங்களை உருவாக்கியவர். இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதே வழியில் தமிழ் புதல்வன், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார். இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில திமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, பாலசிங் ரமேஷ், மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் ஜெசி பொன் ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.