November 30, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு மானிய விலை பட்டா வழங்க வேண்டும் – கூட்டமைப்பு தலைவர் ஏ. பிரான்சிஸ் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பின் சார்பில், தலைவரான A. பிரான்சிஸ் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம்  06.10.2025 அன்று பத்திரிகையாளர்களுக்கு மானிய விலைப்பட்டா வழங்கக் கோரியும் மனு வழங்கப்பட்டது.

மேலும் மனுவில் இந்த மாவட்டம் 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனியாக உருவாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை பத்திரிகையாளர்களுக்கு ஒருமுறையும் மானிய விலைப்பட்டா வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் 2019 ஆம் ஆண்டு தூத்துக்குடி வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நேரடியாக மனு வழங்கியதுடன், அதன் அடிப்படையில் முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து 15.06.2021 அன்று மனு எண் A.37780 என்ற குறிப்புடன் பதில் கிடைத்ததாகவும், அதன் பின்னர் 2021 அக்டோபர் 8 ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களிடம் மனு அளிக்கப்பட்டதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு பெருவெள்ளம் நேரத்தில் தூத்துக்குடி வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் மனு அளிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது பத்திரிகையாளர்களிடையே மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

“இந்திய அரசின் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகையாளர்களுக்கு மானிய விலைப்பட்டா வழங்க தாமதம் நடைபெறுவது ஜனநாயக விரோதம்” எனவும், “2025 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக மானியவிலை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் விரைவில் தலையிட வேண்டும்” எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.