December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளிலும் பசுமை மாநகராகவும் முன்னேறி வருகிறது – மேயர் ஜெகன் பேச்சு

     By,CN. அண்ணாதுரை 

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் செ.ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்றது. 

மேயர் ஜெகன் பெரியசாமி கூட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில்;

நமது மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிற்க்கிணங்க அனைவருடைய ஒத்துழைப்போடும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டமைப்புகளை முறைப்படுத்தி செய்து வருகிறோம். 206 பூங்கா அமையப் பெற்ற மாநகராட்சியில் 50 க்கும் மேற்பட்ட பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பராமரிப்பின்றி கைவிடப்படும் நிலையில் இருந்தது, தற்போது அது சீர் செய்யப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தால் கொசுத் தொல்லை இல்லாமலும் தொற்று நோய்கள் குறைந்துள்ளது. மாநகர பகுதிகளில் பொதுவெளியில் குப்பை கொட்டுவதை கண்காணித்து வருகிறோம். இதனை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டுகளில் தேவையற்ற பிளாஸ்டிக் கழிவுகள் 455 டன் சேகரிக்கப்பட்டது. தற்போது 137 டன் ஆக குறைந்துள்ளது. கடந்த காலங்களில் காற்றின் மாசுபாடு அதிகமாக இருந்தது. தற்போது தருவைகுளம் உரக்கிடங்களில் மரக்கன்று நடும் திட்டம் தொடங்கப்பட்டு மாநகராட்சி பகுதி முழுவதும் மரக்கன்றுகள் நட்டியதால் மாசு குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில் நெகிழி கழிவுகள் இல்லாத மாநகராட்சியாகவும், மாசு இல்லாத பசுமை மாநகராட்சியாக உருவாக்குவதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் வேண்டும். பாதயாத்திரையாகச் செல்லும் திருச்செந்தூர் முருக பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருச்செந்தூர் ரவுண்டானா ஓடை அருகில் பாதசாரிகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நான்கு மண்டல பகுதிகளிலும் புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டு அதில் குழந்தைகளுக்கு நவீன விளையாட்டு உபகரணங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் தனியார் பங்களிப்போடு நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. நகராட்சியாக செயல்பட்ட காலத்தில் 1984-85ம் ஆண்டு பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள பணியாளர்களுக்கு பணிக்காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சேமநல நிதிக்கான வட்டி தொகை 40 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில் 78 நபர்களுக்கு வட்டி தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் இடுப்பளவிற்கு மழை காலங்களில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரது ஆலோசனையின்படி பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முறைப்படுத்தியதால் அந்த நிலை தற்போது இல்லை. குடிதண்ணீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் குழாய் உடைப்பு ஏற்படும் போது அதை சரிசெய்யும் பணிகளை மேற்கொள்ளும்போது சற்று சாலைகள் சேதமடைகிறது. ஒவ்வொரு பகுதியும் நம்முடைய பகுதியாக நினைத்து மாமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் சுகாதாரத்தையும் பேணி பாதுகாப்பது நம்முடைய கடமையாகும். மாநகரை மேலும் அழகுப்படுத்தும் விதமாக சில முக்கிய பகுதிகளில் நமது மாவட்டத்தின் நினைவு சின்னங்களோடு ரவுண்டான அமைக்கப்படுகிறது.

இதுபோன்று பல்வேறு சாதனைகளை அனைவரின் ஒத்துழைப்புடன் செய்துள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

இக் கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், ரெங்கசாமி, கனகராஜ், சுரேஷ்குமார், சரவணக்குமார், ஜெபஸ்டின் சுதா, ராஜதுரை, பட்சிராஜ், விஜயகுமார், சரண்யா, சோமசுந்தரி, மரியகீதா, நாகேஸ்வரி, கண்ணன், பொன்னப்பன், முத்துவேல், பவானி, மெட்டில்டா, காந்திமணி, ராஜேந்திரன், சரண்யா, சோமசுந்தரி, ஜாக்குலின்ஜெயா, தெய்வேந்திரன், சுயம்பு, அதிர்ஷ்டமணி, ராமகிருஷ்ணன், ஜெயசீலி, ரிக்டா, பேபி ஏஞ்சலின், சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, பாப்பாத்தி, மகேஸ்வரி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் எடின்டா, கற்பக கனி, சந்திரபோஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்; முத்துமாரி, மதிமுக கவுன்சிலர் ராமுஅம்மாள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், உதவி ஆணையர்கள் சுரேஷ்குமார், கல்யாணசுந்தரம், பாலமுருகன், வெங்கட்ராமன், உதவிபொறியாளர்; சரவணன், நகரமைப்புத் திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, ராமசந்திரன், நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.