திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா 07.07.25 இன்று கோலாகலமாக நடந்தது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (ஜூலை 7) காலை 6:30 மணியளவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக கடந்த ஜூன் 26ம் தேதி கணபதி பூஜையுடன் குடமுழுக்கு விழா துவங்கியது. கோவிலில் ஜூலை 1ம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் துவங்கின. ராஜகோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட யாகசாலையில் பல்வேறு வர்ணம் பூசி, சித்திரங்கள் வரையப்பட்டு, யாகசாலை முழுவதும் தங்க நிறத்தில் அட்டை ஒட்டப்பட்டு 71 யாகசாலைகள் அமைத்து 700 கும்பங்கள் வைக்கப்பட்டு, 96 மூலிகைகள் இடப்பட்டு பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன.
திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பெருமாளுக்கு தனியாக 5 யாகசாலைகள் அமைத்து, பட்டாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று (ஜூலை 7) அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜைகள், மகா தீபாராதணைகள் நடைபெற்றன. பின்னர், யாகசாலையில் இருந்து கும்பங்கள் கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
| விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. |
காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ராஜகோபுரத்தின் கலசங்களுக்கு ஆராதனை நடந்த பின் அவற்றின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. அதே நேரத்தில், சண்முகர், ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை, குமரவிடங்க பெருமாள், நடராஜர் மற்றும் உள்வெளி பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த திருக்குடமுழுக்கு விழாவில் தமிழ் வேதங்கள் ஓதப்பட்டன.
திருக்குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.திருக்குடமுழுக்கு விழா நிகழ்வை கண்டு களிக்க நகர் முழுவதும் 70 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்குடமுழுக்கு விழா முடிந்ததும் பக்தர்கள் மீது 20 ட்ரோன்கள் கொண்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை கோவில் வளாகத்திலும், கோவிலை ஒட்டி கடற்கரையிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். விழாவில் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா” என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. கோவில் வளாகத்தில் ஆறாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பக்தர்கள் வசதிக்காக தேவையான வாகன நிறுத்தங்கள் மற்றும் பேருந்துகளை இயக்க ஏதுவாக மூன்று தற்காலிக பேருந்து நிலையங்கள், சுகாதார வசதிகள் உட்பட்ட தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் சாலைகளில் 20,000 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்குப் பேருந்து நிலையங்கள் உட்பட பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை சிறப்பாக செய்திருந்தனர்.
விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் மணிவாசன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் / சிறப்பு அலுவலர் மதுசூதன் ரெட்டி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, பேரூராட்சிகளின் இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரதீப்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், கூடுதல் காவல்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா,
திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் சந்தோஷ் ஹடிமணி, மதுரை சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர் அபிநவ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், உட்பட 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, கூடுதல் ஆணையர் ஜெயராமன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், கோயில் தக்கார் அருள்முருகள், இணை ஆணையர் ஞானசேகரன், திமுக மாநில வர்த்தகரணி இணை செயலாளர் உமரி சங்கர், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பை.மூ.ராமஜெயம், திருக்கோயில் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


