December 1, 2025
#தூத்துக்குடி

துாத்துக்குடி மாநகராட்சியில் முறைகேடுகளுக்கு இடமில்லை. பாஜக, பொய் குற்றச்சாட்டுக்கு மேயர் ஜெகன் விளக்கம்

துாத்துக்குடி மாநகராட்சியில் எந்தவித முறைகேட்டுக்கும் இடமில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பா.ஜ.க மாவட்ட தலைவர் பொய்யான தகவலை கூறியிருக்கிறார் என மேயர் ஜெகன் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.

துாத்துக்குடி மாநகராட்சி பணிகள் முறைகேடு குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பு பெற்றிருப்பதாக பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் குற்றம் சாட்டியிருந்தார்.

இது குறித்து துாத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறியிருப்பதாவது; முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் துாத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவிற்கு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது.

மக்களுக்கு தினமும் குடிநீர், முழுமையான சாலை, வடிகால் தெருவிளக்கு வசதிகள் என்று அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி மாநகராட்சியை பசுமை மாநகராட்சியாக உயர்த்தி உள்ளோம். மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்வு காண்பதற்கு வாரந்தோறும் மண்டல குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு முகாமிலேயே சொத்து வரி பெயர் மாற்றம், பிறப்பு, இறப்பு சான்றுகள், உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது.

“தூத்துக்குடியை பற்றி தெரியாத தெற்கு மாவட்ட பாஜக தலைவர்” 

துாத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்றுள்ள கட்டமைப்பு வளர்ச்சிகளை பொறுக்க முடியாமல் துாத்துக்குடியை பற்றியே தெரியாத தெற்கு மாவட்ட பாஜக, தலைவர் சித்ராங்கதன் மாநகராட்சி குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பேட்டியாக கொடுத்திருக்கிறார். சித்ராங்கதன் சொல்வது அனைத்தும் பொய். மாநகராட்சியில் பணிகள் அனைத்தும் விதிகளுக்கு உட்பட்டு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. எந்தவித முறைகேட்டுக்கும் இடமில்லை.

மாநகராட்சி நிர்வாகம் மக்களின் அடிப்படை பணிகளை விரைந்து செய்து வரும் நிலையில் எந்த குறையும் சொல்ல முடியாத வயிற்றெரிச்சலில், பா.ஜ.க வும் துாத்துக்குடியில் செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துவதற்காக பா.ஜ. மாவட்ட தலைவர் பொய் புகார் கூறியிருக்கிறார். மாநகராட்சியில் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க மாநகராட்சி தயாராக இருக்கிறது. அதன் பிறகு சித்தராங்கதனின் பொய் மக்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு வரும். இதோடு மாநகராட்சி பற்றி பொய் சொல்வதை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.