தூத்துக்குடி,திமுகவுடன் தான் எங்கள் கூட்டணி. அனைவராலும் போற்றப்படும் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சிதான். தியாகம் நிறைந்த தூத்துக்குடி மண்ணில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எந்த வடிவிலும் இடமில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் வெளியேற்றமும், இன்றைய அரசியலும்! என்ற தலைப்பில் தூத்துக்குடி பாளை ரோடு சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. குமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமை வகித்தார். நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் உவரி ரைமண்ட், நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் நிஜாம், தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ரஞ்சன், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்டச் கழக செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ், மாநில பொருளாளர் செந்தில் அதிபன், துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், தீர்மான குழு செயலாளர் கவிஞர் மணிவேந்தன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பவுன் மாரியப்பன், தேவேந்திரன், குருசாமி கிருஷ்ணன், ஆஞ்சலா, மாவட்ட பொருளாளர் வேல்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கணேசன், வனராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் கொம்பையா, முத்துப்பாண்டியன், பால்ராஜ், வீர புத்திரன், ராமசாமி, ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினர். மாநகரச் செயலாளர் முருக பூபதி நன்றி கூறினார்.
பொதுக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில்;
தூத்துக்குடி மாவட்ட மக்கள், விவசாயிகள், மீனவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதிக்க கூடாது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈவு இரக்கமின்றி பெண்கள் குழந்தைகள் உட்பட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கருப்பு தினத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட அத்தனை பேர்களின் இல்லத்திற்கும் உடனடியாக சென்று அவர்களுடைய துயரத்தில் பங்கேற்று ஆறுதல் கூறி அவர்களின் தியாகத்துக்கு ஆதரவாக இருந்த தமிழ்நாட்டின் ஒரே அரசியல்வாதி இந்த வைகோ தான்.
தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக என்னுடைய போராட்ட பயணத்தை சட்ட போராட்டமாக மாற்றி நீதிமன்றம் மூலம் வெற்றியும் கண்டது மதிமுக இயக்கம். ஆனால் பல்வேறு முறைகேடுகளை, விதி முறை மீறல்களை, பணத்தால் வளைத்து விடலாம் என நினைத்து கொண்டு தற்போது நாசகார ஆலை நிர்வாகம் பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் உள்ள மக்களை, விவசாயிகளை, வேளாண் பெருங்குடி மக்களை, உயிரை பணயம் வைத்து அலை கடலோடு நித்தம் போராடும் மீனவ தொழிலாளர்களை ஆசை காட்டி நேச வார்த்தை கூறி, கரன்சி நோட்டுகளை வாரி இறைத்து நாள் தவறாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கூலி போராட்டம் என்ற நாடகம் நடத்தி வருகிறது. இதை வன்மையாக கண்டிப்பதோடு, தொடர்ந்து இந்த நாசாகார ஆலைக்கு எதிராக மதிமுக களத்தில் உண்மையாக உறுதியாக நின்று போராடும். தூத்துக்குடி மாவட்டம் விடுதலை வீரர்கள் வாழ்ந்த தியாகம் நிறைந்த பூமி, திராவிட இயக்க தீரர்களின் வீரம் செறிந்த மண் இது, இங்கே ஸ்டெர்லைட் ஆலையின் ஆள் பிடிப்பு வேலைகளுக்கு இடமில்லை.
அண்ணாவின் தம்பதிகளில் ஒருவன் வைகோ, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரால் 25 ஆண்டு காலம் வார்ப்பிக்கப்பட்டவன் இந்த வைகோ.
எல்லாராலும் போற்றப்படுகிற புகழப்படுகிற திமுக ஆட்சி மற்ற மாநிலங்கள் எல்லாம் நாம் தமிழ்நாட்டை பின்பற்ற வேண்டும் என்ற சீரிய நிர்வாகத்தை தருகிற திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தளபதி ஸ்டாலின் ஆட்சி 2026 தேர்தலுக்குப் பின்னரும் தொடவேண்டும் திமுக ஆட்சி மலர வேண்டும். அதற்காக மனப்பூர்வமாக திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கரம் கோர்த்து நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் பணி ஆற்றுவோம். என்னுடைய சகாக்கள் தன்னலமற்ற வீர திலகங்கள் அவர்களால் மதிமுக கட்சி காப்பாற்றப்படுகிறது. அவர்களால் இந்த இயக்கம் போற்றப்படுகிறது. திமுகவுடன்தான் எங்கள் கூட்டணி. அதில் எந்த மாற்றமும் இல்லை என வைகோ உணர்ச்சிமிக்க உரையாற்றினார்.
இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவண பெருமாள், இலக்கிய அணி தராசு மகாராஜன், விவசாய அணி சிவகுமார் மாநில கலைத்துறை துணைச் செயலாளர் கோடையடி ராமச்சந்திரன் மாநில திருமண குழு உறுப்பினர்கள் முத்துச்செல்வன் பேச்சுராஜ் ஜெயச்சந்திரன் மற்றும் நகர ஒன்றிய செயலாளர்கள், தெற்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.

