December 1, 2025
#தூத்துக்குடி

உழவரைத் தேடி திட்டம், முதலமைச்சர் காணொளி மூலம் துவக்கி வைத்தார். அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்டங்களை வழங்கினார்

தூத்துக்குடி, உழவரைத் தேடி எளிமை ஆளுமை திட்டத்தை திருவாரூர் மாவட்டம் மணிமங்கலம் கிராமத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக துவக்கி வைத்ததையடுத்து, தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் வட்டம் ஜெக வீரபாண்டிய புரம் கிராமம் கே.சுப்ரமணியபுரத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் முன்னிலையில், தொடங்கி வைத்து உழவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்;

தமிழ்நாடு அரசு வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து வேளாண்மைக்கென தனி நிதி நிலை அறிக்கை கொண்டு வந்து அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திட வழிவகை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தி அதிகரித்திடவும் உழவர்களின் வருமானத்தை பெருக்கிடவும் பல்வேறு திட்டங்களை தொழில் நுட்பங்களுடன் ஒருங்கிணைத்து, வேளாண்மை உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவுத்துறை மற்றும் மண்ணியல் விஞ்ஞானிகள் உள்ளிட்ட 11 துறைகள் இணைந்து கிராமங்களுக்கு உழவர்களிடம் நேரடியாக எடுத்துச் சென்று அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவும். உழவர்களும் தங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை நேர்த்தியாக கையாண்டு அதை மதிப்பு கூட்டி சந்தைப் படுத்துவதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கிய “உழவரைத் தேடி” வேளாண்மை உழவர் நலத்துறை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.

உழவரைத் தேடி திட்ட மூலம் வேளாண்மை துறை விரிவாக்க சேவைகள் கிராமத்திற்கு சென்று உழவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அரசின் நலத் திட்டங்கள் விரைவாக உழவர்களை சென்றடையவும் 12 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு வட்டாரங்களிலும் இரண்டு கிராமங்களில் நடத்தப்பட உள்ளது. இதனால் வேளாண் பெருமக்களின் உழைப்பும் நேரமும் மிச்சமாவதுடன் வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதிலும் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் வழிவகுக்கும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டு பயனடைந்தனர்.