December 1, 2025
#தூத்துக்குடி

கல்வி வளர்ச்சி தடை, பேரிடர் நிதி மறுப்பு, மொழி அழிப்பு என செயல்படும் பாஜக அரசு – அமைச்சர் கீதாஜீவன்

CN. அண்ணாதுரை

தூத்துக்குடி,தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தூத்துக்குடியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி – 2025 காமராஜர் கல்லூரியில் நடைபெற்றது.

பேச்சுப் போட்டி நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் போராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு பேச்சுப் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

போட்டியை தொடங்கி வைத்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது;

தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையம் சார்பில் இளைஞர் சமுதாயத்தினர் தமிழ் இனத்தையும், தமிழ் மொழியையும் அறிந்து கொள்வதற்காக ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டு கடந்த 19ம் தேதி தென்காசி, 20ம் தேதி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. இப்போது தூத்துக்குடியில் பேச்சு போட்டி நடைபெறுகிறது. இந்த பேச்சு போட்டியானது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. 120 மாணவ மாணவிகள் தமிழிலும், 50 பேர் ஆங்கிலத்திலும் பேச்சு போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கி பாராட்ட உள்ளனர்.

தமிழ்நாட்டில், என்றைக்கும் இரு மொழி கொள்கைதான் செயல்படும். ஆனால், தமிழ் மொழியின் வளர்ச்சியை சகிக்க முடியாமல், சிலர் பொறாமை கொண்டு தமிழ் மொழியை அழிக்க துடிக்கின்றனர். ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் மொழியை அழித்தால் போதும். அந்த இனம் அழிந்து விடும். அப்படித்தான், தமிழ் மொழியை அழிக்கவும் தற்போது முயற்சிகள் நடக்கிறது. அனைவருக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும். எல்லோரும் உயர் நிலையை அடைய வேண்டும் என்பது தான், திராவிட மாடல் ஆட்சியின் முக்கிய நோக்கம். அதனை தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது சிலருக்கு பிடிக்காமல் நமது மொழியை அழிப்பதற்கான முயற்ச்சியில் இறங்கி உள்ளனர். இதனால் மத்திய அரசு நமக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி, பேரிடர் நிதி எதனையும் வழங்காமல், நமது உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழின் பெருமையை எவராலும் பறிக்க முடியாது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சிக்காரர்கள் மத்தியில் தனது இருப்பை வெளிப்படுத்திக் கொள்ளவும், பத்திரி கைகளில் அவர் பெயர் வரவேண்டும் என்பதற்காகவும் ஏதாவது ஒன்றை உளறி வருகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நாகரிகமற்ற ஒருமையில் பேசியுள்ளார். இவர் எப்படி ஐபிஎஸ் படித்தார் என்பது தெரியவில்லை. தமிழக பாஜகவில் தான் முக்கியமானவர் என்பதை காட்டிக் கொள்வதற்காக இப்படி வாய்க்கு வந்ததை யெல்லாம் பேசி வருவதாக அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் பெனட் ஆசிர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், பேராசிரியர்கள் ஜான்சி, யூஜின், கீர்த்திகா, வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், நெல்லை கிழக்கு மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் தவசிராஜன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, அருணா தேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, இளைஞரணி துணை அமைப்பாளர் ஐ.ரவி, ஆதிதிராவிடர் நலக்குழு மாநகர அமைப்பாளர் பரமசிவன், மகளிரணி ரேவதி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.