December 1, 2025
#திருச்செந்தூர்

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் அரோகரா கோஷம் முழங்க நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செய்தி:CN. அண்ணாதுரை

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழாக்களில் மிகவும் சிறப்பு மிக்கதாக கருதப்படுவது கந்தசஷ்டி திருவிழாவாகும். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் பக்தர்கள் விரதம் இருந்து வருகிறார்கள்.

திருவிழாவின் முக்கிய‌ நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 07.11.24 அன்று மாலை கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது. முருகப் பெருமான் சுவாமி ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்வதற்காக வென்பட்டு உடுத்தி, வெட்டிவேர் மயில் தோகை மாலை அணிந்து கடற்கரைக்கு வருகை தந்தார். முதலில் மாயையே உருவாக கொண்ட யானைமுகம் கொண்ட தாரகாசூரன் தனது பரிவாரங்களுடன் முருகபெருமானிடம் போரிடுவதற்காக, அவரை மூன்றுமுறை சுற்றி வந்து சுவாமிக்கு எதிராக நின்றான். 4.54 மணிக்கு முருகப்பெருமான் வேல் கொண்டு தாரகாசூரனை வதம் செய்தார்.

தன்பிறகு கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரன், முருகபெருமானை வலமிருந்து இடமாக மூன்றுமுறை சுற்றி வந்து, நேருக்கு நேர் போரிட தயாரானான். 5.09 மணிக்கு சிங்கமுகாசூரனையும் முருகபெருமான் வேலால் சம்ஹாரம் செய்தார். தொடர்ந்து சூரபத்மன் தனது படைவீரர்களுடன் வேகமாக முருகபெருமானுடன் போர் புரிய வந்தான். தொடர்ந்து 5.22 மணிக்கு முருக பெருமான் வேல் எடுத்து சூரபத்மனை வதம் செய்தார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகப்பெருமான் சேவலும், மயிலுமாக மாறி ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும், மயிலை வாகனமாகவும் வைத்து கொண்டார்.

சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர். கந்த சஷ்டி விழாவையொட்டி, விரதம் இருந்த பக்தர்கள், திருச்செந்தூரில் தங்களது விரதத்தை நிறைவுசெய்தனர். சூரசம்ஹாரம் நிகழ்ந்தபோது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா’ போன்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கி சாமி தரிசனம் செய்தனர்.

சம்ஹார நிகழ்ச்சி முடிந்ததும் கோயில்வளாகத்தில் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர். கந்த சஷ்டி 7ம் நாளான நவம்பர் 8ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக தெப்பகுளம் அருகே உள்ள முருகமடத்தை சென்று சேருகிறார். அங்கு மாலை 6:30 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான் காட்சி கொடுத்ததும் தெற்குரதவீதி சந்திப்பில் தோள் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. இரவு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்கபெருமான் தெய்வானை அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில் திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கோபுரங்களில் காவலர்கள் தொலைநோக்கு கருவி மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடலில் படகுகள் ரோந்து பணியில் ஈடுபட்டது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத். அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைதலைவர் ரமேஷ், தாசில்தார் பாலசுந்தரம் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொணடனர்.