விதை விலை உயர்வால் நஷ்டத்தில் விவசாயிகள் – மாநில அரசு உதவுமா? இது குறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் மாநில அரசாங்கத்திற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர் அதன் விபரம் –
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1,70,000 ஹெக்டேர் நிலங்களில் விவசாயம் நடைபெறுகிறது. தென் பகுதியில் ஆற்றுப்பாசனமும், வட பகுதியில் வானம் பார்த்த மானாவாரி கரிசல் நிலங்களும் உள்ளன. இப்பகுதிகளில் உளுந்து, பாசி, கம்பு, மக்கா, வெள்ளைச் சோளம், பருத்தி, சூரியகாந்தி, எள், மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி போன்ற சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் விதைகள் பரவலாக பயிரிடப்படுகின்றன.
கடந்த தலைமுறைகள் இயற்கை முறையிலேயே விவசாயம் மேற்கொண்டதால் மண் வளம் காத்து வைக்கப்பட்டது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக உற்பத்தியை அதிகரிக்க தொழில்மயமான முறைகள் அரசு ஊக்குவிக்கத் தொடங்கியது. இதனால் இரசாயன உரங்கள், வீரிய ஒட்டுரக விதைகள், மற்றும் வேதியியல் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தும் நிலை உருவாகியது. தற்போது விவசாயிகள் முற்றிலும் அரசின் ஆதரவையே நம்பி செயல்பட வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர்.
அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய இடங்களில் இருந்து விதைகள் வாங்கி வருகின்றனர். இது விதை நிறுவனங்களுக்கு சுதந்திரமாக விலை உயர்த்த அனுமதிக்கின்றது. உதாரணமாக:
1.501 ரக வெள்ளைச்சோளம் (3 கிலோ பை): கடந்தாண்டு ₹850 → இப்போது ₹1050
2.மக்காச்சோளம் (4 கிலோ பை): கடந்தாண்டு ₹1300 → இப்போது ₹1600
3.பருத்தி விதை (475 கிராம் பாக்கெட்): ₹900 → ₹1100
4.கம்பு (1.5 கிலோ பை): ₹800 → ₹1000
5.உளுந்து (5 கிலோ பை): ₹1000 → ₹1300
விவசாயிகளின் தானிய விலை கடந்த 10 ஆண்டுகளாக மாறாமல் இருக்க..விதை விலை மட்டும் ஆண்டுதோறும் அதிகரிப்பது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு மேலாக விவசாய வேலை செய்யும் கூலி பல மடங்கு உயர்ந்துள்ளது.
பிற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் நலத்திட்டங்கள்:
உத்தரப்பிரதேச அரசு விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து நேரடியாக கொள்முதல் செய்கிறது. தெலுங்கானா அரசு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹10,000 வரை மானியமாக வழங்குகிறது. இதுபோன்று தமிழக அரசும் உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையிடுகின்றனர்.
விவசாயிகள் சங்கம் வலியுறுத்தும் கோரிக்கைகள்:
1. விதை நிறுவனங்களை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.
2. கடந்த ஆண்டின் விலையே இந்த ஆண்டும் விதைகளுக்காக நிர்ணயிக்கப்பட வேண்டும்.
3. பிற மாநிலங்களை நம்பாமல், தமிழகத்தில் தனியார் விதை உற்பத்திப் பண்ணைகளை உருவாக்க அரசே கட்டமைப்பு அமைக்க வேண்டும்.
4. வீரிய ஒட்டுரக விதைகளுக்குப் பதிலாக நாட்டு ரகங்களை ஊக்குவிக்க வேண்டும்.
மேலும் கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ.வரதராஜன் கூறுகையில், “விவசாயிகள் நலனுக்காக, விதை விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது” என அறிக்கையில் கூறினார்.
.

