December 1, 2025
#திருச்செந்தூர்

திருச்செந்தூரில் கடல் அரிப்பு, கனிமொழி எம்பி, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு நேரில் ஆய்வு!

By, அண்ணாதுரை 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர்கள் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், பி.கே. சேகர்பாபு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திமுக துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆகியோர் இன்று (18.01.2025) தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறுகையில்;

திருச்செந்தூர் முருகன் கோயிலை ஒட்டி இருக்கக்கூடிய சுடற்கரையானது தொடர்ந்து காலநிலை மாற்றத்தினால் கடல் அரிப்புக்கு உள்ளாகி கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கடற்கரை பகுதியில் கூட முடியாத சூழல் இருப்பதையும் கடல் அரிப்பினால் அச்சுறுத்தல் மற்றும் கரை குறைந்து கொண்டே வரக்கூடிய சூழலை இன்று அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் ஆய்வு செய்தோம். கடல் அரிப்பு பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வை உருவாக்கி தர வேண்டும் என்ற வகையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள திருச்செந்தூர் திருக்கோயிலின் குடமுழுக்கிற்கு முன்பாக அதற்கான பணிகளை விரைந்து முடிப்பதற்கும் துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் ஐஐடி வல்லுநர்களை கொண்டு நிரந்தா தீர்வு ஏற்படுத்துவதற்கு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆலோசித்து தேவையான நிதி ஒதுக்கீடு பெற்று கடல் அரிப்பை தடுப்பதற்கான நிரந்தர தீர்வை முதலமைச்சர் அறிவிப்பார்கள்

கரை ஒதுங்கிய சிற்பங்கள் வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களாக இருந்தால் நிச்சயமாக அவற்றை பாதுகாப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் கடல் அரிப்பு என்பது தமிழ்நாட்டில் மட்டும் நடக்கவில்லை உலகம் முழுவதும் இருக்கக்கூடிய கடற்கரை பகுதியில் மண் அரிப்பு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இது அனைத்து இடங்களிலும் நடந்து கொண்டிருக்க கூடிய பிரச்சனைதான். மிக அதிக அளவில் பாதிக்கப்படக்கூடிய இடங்களை கண்டறிந்து அவற்றை பாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். நீண்ட கால தீர்வுகளுக்காக தான் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. திராவிட முன்னேற்ற கழக அரசு போல காலநிலை மாற்றத்தையும் அதனால் வரக்கூடிய விளைவுகளையும் புரிந்து கொண்டு செயல்படக்கூடிய ஆட்சி வேற எதுவும் இருக்க முடியாது. திருச்செந்தூர் புறவழிச் சாலை பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு குடமுழுக்கிற்கு முன்பாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துனைத் தலைவர் ஏ.பி.ரமேஷ், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, திமுக தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பை.மூ.ராமஜெயம், துணை அமைப்பாளர் மா.சுதாகர், ஒன்றிய செயலாளர்கள் ஆத்தூர் சதிஷ் குமார், உடன்குடி இளங்கோ, கவுன்சிலர் ஓடக்கரை சுகு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

.

 

.