December 1, 2025
#தூத்துக்குடி

மனுக்களுக்கு தீர்வும், மாநகராட்சிக்கு வளர்ச்சியும்– தூத்துக்குடி மேயர் நடவடிக்கைகள்

தூத்துக்குடி மாநகராட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வருகிறது.தூத்துக்குடி மாநகராட்சி கிழக்குமண்டலத்தில் 16.07.25 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார், மாநகராட்சி துணை ஆணையர் சரவணகுமார் முன்னிலை வகித்தார்.

முகாமில் கிழக்கு  மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளில் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் கலந்து கொண்டு சொத்து வரி நிர்ணயம், பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், தொழில் வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவை குறித்து கோரிக்கை மனுக்களை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கினார்கள்.

முகாமில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்க்கிணங்க, மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மூலம் மனுக்களை பெற்று பரிசீலனை செய்து முன்னுரிமை அடிப்படையில் தீர்வு கண்டு வருகிறோம். தூத்துக்குடி மாநகராட்சி முன்மாதிரியான ஒரு மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. தற்போது மாநகராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்று வருகிறது. மூன்று வார்டுக்கு ஒரு முகாம் என பிரித்து நடைபெறுகிறது. “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களிலும் மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. நேற்றைய முகாமில் நகாராட்சி துறை சார்பில் 22 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 

35 ஆண்டுகளுக்கு முன் இருந்த பழைய குழாய்கள் மாற்றம்

கிழக்கு மண்டலத்தை பொறுத்தவரை சாலை, வடிகால் வசதிகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலம் குரூஸ் புரம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் வழங்கப்படும் 5 வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் 35 ஆண்டுகளுக்கு முன் இருந்த பழைய குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு குடிநீர் வினியோகம் விரைவில் சீரான முறையில் வழங்கப்படும். பக்கிள் ஓடையில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் அதிகம் கொட்டப்படுகிறது, இதனால் கழிவுநீர் கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பொதுமக்கள் கேரிபேக் உபயோகத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் வரும் தலைமுறைக்கு பசுமையான மாநகரை உருவாக்கி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நகரின் மையப்பகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தெருக்களில் சுற்றி தெரியும் கால்நடைகளை பிடித்து பராமரிப்பதற்காக மாநகராட்சி சார்பில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு சுகாதார பணிகளுக்காக 150 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பகுதி சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

இன்றைய முகாமில் 31 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது, இதில் இரண்டு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு அதற்கான தீர்வாணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

முகாமில் உடனடி தீர்வாணைகள் – மேயர் ஜெகனுடன் துணை ஆணையர் சரவணகுமார் கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ரெக்ஸ்லின்

நிகழ்ச்சியில் இளநிலைப் பொறியாளர் ராமச்சந்திரன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் பேபி ஏஞ்சலின், ரெக்ஸ்லின், தனலெட்சுமி, மகேஸ்வரி, ராமு அம்மாள், சுகாதார அலுவலர் நெடுமாறன், மேயர் உதவியாளர் ரமேஷ், ஜோஸ்பர், மாவட்ட திமுக பிரதிநிதி ராஜ்குமார், வட்ட செயலாளர் பொன்ராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.