November 30, 2025
#தூத்துக்குடி

சேவைபெரும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக்கோரியும், பொய்வழக்கு, போதை பொருள் நடமாட்டத்தை தடுக்கக் கோரி பாமக ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சேவை பெரும் உரிமைச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும், தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேவை பெரும் உரிமைச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும், இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுபான்மை சான்றிதழ் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட பாமக சார்பில் சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சியுடன், இந்து முன்னணி, ஹிந்து தேசியகட்சி, சிவசேனா கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்று கண்டன கோசங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, தூத்துக்குடி மத்திய மாவட்ட பாமக செயலாளர் சின்னத்துரை தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் பரமகுரு, தெற்கு மாவட்ட தலைவர் சிவபெருமாள், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.

இதில், தூத்துக்குடி பாட்டாளி மக்கள் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் மாடசாமி, அமைப்பு செயலாளர் காளிராஜ், கோவில்பட்டி நகர செயலாளர் கருப்பசாமி, மத்திய மாவட்ட துணைச் செயலாளர்கள் கந்தசாமி, தொம்பைராஜ், ஹிந்து முன்னணி மாநில தலைவர் சுப்புராஜ் தொண்டைமான், சிவபாரத இந்து மக்கள் இயக்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், ஹிந்து தேசியகட்சி மாநில தலைவர் ரவிசந்திரன், சிவசேனாகட்சி மாநில தலைவர் சசிகுமார், மூவேந்தர் இந்து மக்கள் முன்னணி மாநில தலைவர் கோமதிராஜ், அகில பாரத இந்து மகாசபா நெல்லை நகர தலைவர் செல்வம், வழக்கறிஞர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். தூத்துக்குடி மாநகர செயலாளர் அல்போன்ஸ் நன்றி கூறினார்.